பணியர், தோடர், கோத்தர், காட்டுநாயக்கர், குறும்பர், இருளர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் நீலகிரியில், ஒரு சில பழங்குடியின சமூகத்தினர் மட்டுமே கல்வி மற்றும் பொருளாதாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகின்றனர். பெரும்பாலான பழங்குடிகள் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒவ்வோர் ஆண்டும் பல கோடி ரூபாய் நிதியை பழங்குடிகளுக்காக ஒதுக்கீடு செய்கின்றன. அரசின் இந்த வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாகப் பழங்குடிகளைச் சென்று சேராததே இவர்களின் பின்னடைவுக்குக் காரணம் எனப் பழங்குடியின செயற்பாட்டாளர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
அரிதாகவே ஒரு சில திட்டங்கள் பழங்குடிகளுக்கு வந்து சேர்கின்றன. அதனை விடாமல் இறுகப்பற்றி முன்னேறி வருகின்றனர் அம்மக்கள். அப்படி கிடைத்த ஒரு நல்வாய்ப்பான திட்டம்தான், பழங்குடிப் பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்.

Also Read: நீலகிரி: பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; இலக்கை எட்டிய முதல் மாவட்டம்!
பழங்குடியினர் மேம்பாட்டுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில், ஊட்டி அருகில் உள்ள முத்தோரைப் பாலாடா பகுதியில் முன் முயற்சியாக பழங்குடிப் பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் ஒன்று தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகத் துவக்கப்பட்டது. ஒவ்வொரு பழங்குடி இனத்திலிருந்தும் தலா இரண்டு பெண்கள் என மொத்தம் 12 பழங்குடிப் பெண்கள், தங்களின் கூட்டு முயற்சியில் வெற்றிகரமாக இந்த பெட்ரோல் பங்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த சிறப்பான திட்டம் குறித்து நீலகிரி மாவட்ட பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார் நம்மிடம் பேசுகையில், ``மத்திய பழங்குடியின அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை நிதியிலிருந்து முன்மாதிரியாக இந்த முயற்சியை மேற்கொண்டோம். சுழற்சி முறையில் 12 பழங்குடிப் பெண்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.8500 ஊதியம் மற்றும் அகவிலைப்படியையும் வழங்கி வருகிறோம். தொலைவில் இருந்து வந்துள்ள பெண்களுக்கு பழங்குடியின மையத்திலேயே தங்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம். இது போன்ற பெட்ரோல் பங்க்களை பல இடங்களில் விரிவுபடுத்த வேண்டும் என அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்" என்றார்.

Also Read: "ஏதோ எங்களால் முடிந்தது!" - பழங்குடி மற்றும் நாடோடி மக்களுக்கு உதவும் கல்லூரி மாணவர்கள்!
பெட்ரோல் பங்க் மூலம் பயனடைந்து வரும் பழங்குடியின பெண் ஒருவரிடம் பேசுகையில், ``ஆரம்பத்துல இந்த வேலை எங்களுக்கு ரொம்ப புதுசா இருந்தது. இப்போ ரொம்பப் பிடிச்சிப்போச்சு. ஒவ்வொரு நாளும் புது அனுபவமா இருக்கு. இந்த வேலை செய்யுறது மனசுக்கும் ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. கொரோனாவால குடும்பத்துல யாருக்கும் சரியா வேலை கிடைக்கிறதில்ல. எங்களோட சம்பாத்தியம் இப்போ வீட்டுக்கு ரொம்ப உதவியா இருக்கு. ஊர் மக்களும் ரொம்பவே சப்போர்ட் பண்றாங்க. எங்கள மாதிரியே இன்னும் பல பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி வாய்ப்புக் கிடைச்சா இன்னும் சந்தோஷப்படுவோம்" என்றார் நம்பிக்கையுடன்.
from Latest News https://ift.tt/3h20WCO
0 Comments