https://gumlet.assettype.com/vikatan/2021-06/d9ecaa4d-e5e4-4426-bd36-6b17085ce5d6/collector_inspection_1.jpg``உங்கள மாதிரி கலெக்டர் ஆகப்போறேன்!" - ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியரை நெகிழ வைத்த மாணவர்கள்

கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றுக்கு ஆய்வுக்குச் சென்ற ஆட்சியர், மாணவர்களிடம் எதிர்கால லட்சியம் பற்றி கேட்க, `உங்களைப் போல ஆட்சியர் ஆக வேண்டும்', `மருத்துவராக வேண்டும்' என்று மாணவர்கள் கூறி, ஆட்சியரை அசரடித்துள்ளனர்.

ஆட்சியர் ஆய்வு

Also Read: `தேவாங்குகளுக்கு காப்புக்காட்டில் விரைவில் சரணாலயம்!' - அறிவித்த கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. அதுகுறித்து ஆய்வு செய்யவும், பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்று தெரிந்துகொள்ளவும், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களிடம் எளிமையாக உரையாடினார்.

மாணவர்களிடம், `படித்து முடித்தபின் எதிர்காலத்தில் என்ன பணிக்குச் செல்ல விருப்புறீங்க?' என்று ஆட்சியர் கேட்க, `நான் உங்களை போல மாவட்ட ஆட்சியராக போறேன்', `காவல்துறை உயர் அலுவலர்', `மருத்துவர்' என ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள கனவுகளை வெளிப்படுத்தினர். அதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் அனைவருக்கும், அவரவர் கனவுகள் நிறைவேற வாழ்த்துகளைச் சொல்லி, அவர்கள் படிக்கும் வகுப்பிற்கான புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், ``கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையினை தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில், வெள்ளியணை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைப்பணி தொடர்பாக நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

ஆட்சியர் ஆய்வு

தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான வகுப்புகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகின்றது. கரூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 666 தொடக்கப் பள்ளிகளும், 183 உயர்நிலைப்பள்ளிகளும், 93 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 1,061 பள்ளிகள் உள்ளன. இதில், அரசுப்பள்ளிகளில் 79,753 மாணவ, மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15,901 மாணவ, மாணவிகளும், தனியார் பள்ளிகளில் 73,793 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 1,69,447 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இனிவரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையினை அதிகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்படும். பள்ளிகளில் ஏதேனும் அடிப்படை வசதிக்குறைபாடுகள் இருந்தால், அவை உடனுக்குடன் சரிசெய்யப்படும்.

இன்றைய ஆய்வின்போது, 6-ம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் நான், ``ஏன் முகக்கவசம் அணிந்திருக்கிறாய்?" என்று கேட்டேன். அந்தக் கேள்விக்கு அந்த மாணவர், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து அருமையாக விளக்கினார். அந்த அளவிற்கு தமிழக அரசின் நடவடிக்கையால், 6-ம் வகுப்பு மாணவருக்கும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும்போதும், அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் நலனையும், ஆசிரியர்களின் நலனையும் காக்கும் வகையில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கும்" என்றார்.

ஆட்சியர் ஆய்வு

Also Read: `நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது!'- தனியார் பேருந்து உரிமையாளரை நெகிழ வைத்த மாணவர்கள்

பின்னர், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான உலர் உணவுகளின் அளவுகள் சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வுசெய்தார். மாவட்ட ஆட்சியர் தங்களிடம் இயல்பாகப் பேசியது, கேள்விகள் கேட்டது எல்லாம் வெள்ளியணை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உற்சாகம் தந்தது.



from Latest News https://ift.tt/3wa29w2

Post a Comment

0 Comments