https://gumlet.assettype.com/vikatan/2021-06/9626040a-abc5-4e6f-b4e0-077ae8ac29f6/vikatan_2020_04_16f5c3af_c65b_495f_8f8b_ac7cac553626_vikatan_2019_05_c17d1b73_e06a_45ae_8f74_22793de.jpgஜெய்ஹிந்த் விவகாரம்: `தேசப்பற்று பற்றி எனக்கு பாடம் எடுக்க தேவை இல்லை!’ - கொங்கு ஈஸ்வரன் காட்டம்

கடந்த வாரம் நடந்த, தமிழக சட்டப்பேரவைத் கூட்டத் தொடரில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், ‘‘கடந்தாண்டு ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே இருந்தது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை. தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது’’ என்று பேசினார்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்

இந்தியர்களின் ஒருங்கிணைந்த உணர்வு, தேசப்பற்று மற்றும் தேசத்தின் பெருமையை சொல்லக்கூடிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் சட்டமன்றத்தில் ஈஸ்வரன் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என இந்த விவகாரம் குறித்து பா.ஜ.கவைச் சேர்ந்த பலரும் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். தமிழகம் முழுக்க இந்த விவகாரம் சலசலப்பை உண்டாக்கியது. ‘கடந்த அரசு ஜெய்ஹிந்த் என்ற இந்தி வார்த்தையை ஆளுநர் உரையில் திணித்திருந்தனர். அந்த திணிப்பை இந்த அரசு செய்யவில்லை. மொழியை ஒப்பிட்டு நான் கூறியதை, பா.ஜ.க உள்ளிட்டோர் தவறாக புரிந்து கொண்டனர். மற்றபடி ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு நான் எதிரானவன் அல்ல’ என்று இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரன் விளக்கம் அளித்திருந்தார். இருந்தாலும், பா.ஜ.க.,வினர் உட்பட பலரும் இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து, ஈஸ்வரனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

``எங்கள் இயக்கத்தின் பெயரிலேயே தேசியம் வர வேண்டுமென்று உருவாக்கியவர்கள் நாங்கள்” - ஈ.ஆர்.ஈஸ்வரன்

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஈஸ்வரன், “தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆட்சிகளில் நிகழ்த்திய ஆளுநர் உரையில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டி, முந்தைய அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய கட்டுப்பாட்டில் இருந்ததையும், இப்போதைய அரசு யாருக்கும் கட்டுப்படாத தலைநிமிர்ந்த அரசாகவும் செயல்படுவதை குறிப்பிட்டிருந்தேன். ஒன்றிய அரசோடு உறவுக்கு கை கொடுப்பது வேறு. தன்னை காப்பாற்றிக் கொள்ள தலைகுனிவது வேறு. ஆட்சியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள தலைகுனிந்து இருந்த தமிழக அரசு மே 2-ஆம் தேதிக்கு பிறகு தலைநிமிர்ந்து இருக்கிறது என்று பலராலும் சொல்லப்பட்ட உண்மைதான் நான் குறிப்பிட்டேன். ஜெய்ஹிந்த் என்ற உணர்வுபூர்வமான முழக்கத்திற்கு, இந்தி மொழிக்கும் நான் எதிரி அல்ல. இருமொழி கொள்கையை கடைப்பிடிக்கின்ற தமிழக அரசின் ஆளுநர் உரையில் இந்தி மொழி திணிக்கப்பட்டிருப்பதை தான் நான் குறிப்பிட்டேன்.

Also Read: `ஜெய்ஹிந்த்' விவகாரம்: எம்.எல்.ஏ ஈஸ்வரனின் சட்டமன்றப் பேச்சும்... சர்ச்சையும்!

உரையினுடைய தொடக்கத்திலேயே தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.உ.சி போன்ற தமிழ் மண்ணின் சுதந்திர போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை வணங்கிய எனக்கு தேசப்பற்றை பற்றி யாரும் பாடம் எடுக்க வேண்டிய தேவை இருக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 25 ஆண்டுகால பொதுவாழ்வில் தேசத்தினுடைய ஒற்றுமையை என்னுடைய உரைகளில் தூக்கி நிறுத்தி, முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். ஜெய்ஹிந்த் என்ற உணர்வு முழக்கம் ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது. பலமுறை என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பின்னாலும் சில அனுபவம் மிக்க தலைவர்கள் கூட தங்கள் சுய விளம்பரத்திற்காக மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. புரியாதவர்கள், புரிந்தும் புரியாதது போல் நடிப்பவர்களுக்காக தான் நான் இந்த விளக்கத்தை கொடுக்கின்றேன். எங்கள் இயக்கத்தின் பெயரிலேயே தேசியம் வர வேண்டுமென்று உருவாக்கியவர்கள் நாங்கள்” கூறியுள்ளார்.



from Latest News https://ift.tt/3hjQ7ei

Post a Comment

0 Comments