புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஒன்றியக் குழுக் கூட்டம் துவங்குவதற்கு முன்பு கூட்ட அறையில் நேரு, இந்திராகாந்தி, அண்ணா, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர்,தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அதுவும் அண்ணாவின் படத்திற்கு அடுத்து எடப்பாடி பழனிசாமியின் படம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் தான், எடப்பாடி பழனிசாமியின் படம் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினர்கள் "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இருக்கட்டும்; ஆனால், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை உடனே அங்கிருந்து அகற்றுங்கள்" என்று கூறி கூச்சலிட்டனர்.
இதையடுத்து அ.தி.மு.க சேர்மன் முன்பே எடப்பாடி பழனிசாமியின் படத்தை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அகற்றினர். அதன் பின்பே ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே தி.மு.க பெண் உறுப்பினர்களுக்குப் பதிலாக அவர்களது கணவர்கள் கலந்துகொண்ட நிலையில் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதுபற்றி அங்கிருந்த தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிலர்,
"முன்னாள் அமைச்சராக இருந்த விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், தி.மு.க பெரும்பான்மையிருந்தும் காங்கிரஸ் உறுப்பினர்கள், தி.மு.க உறுப்பினர் ஒருவர் என பணப்பேரம் நடத்தியும் சித்து விளையாட்டுகளை நடத்தியும் அன்று மாவட்ட சேர்மன் பதவியில் அ.தி.மு.க-வினரை அமரச் செய்தார். அதே போல் தான் அன்னவாசல் ஒன்றியத்தில் ஒன்றிய சேர்மனாக அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் ராமசாமியை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கடைசியில் அவரையே சேர்மனாக ஆக்கினார். சேர்மன் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இதற்கிடையே அடுத்த கூட்டங்களில் சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறோம். நியாயமாகப் பார்த்தால், தி.மு.கவைச் சேர்ந்த உறுப்பினர் தான் சேர்மனாக வரணும். விராலிமலை எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் சித்து விளையாட்டெல்லாம் இனி நடத்த முடியாது. அவரின் செல்வாக்கு எல்லாம் இனி எடுபடாது" என்றனர்.
from Latest News https://ift.tt/3699rFH
0 Comments