சுயாதீன எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பயன்படுத்தும் விதமாக புதிய செய்திமடல் (Newsletter) தளம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது ஃபேஸ்புக். சில மாதங்களாகவே அதனைப் பற்றிய பேச்சு அடிபட்டு வந்த நிலையில், நேற்று 'Bulletin' என்ற அந்த புதிய செய்திமடல் தளத்தை அறிமுகப்படுத்தியது ஃபேஸ்புக். இதை சமீபத்தில் அறிமுகமான ஃபேஸ்புக்கின் 'ஆடியோ ரூம்' (கிளப்ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேஸ் போன்ற வசதி) மூலம் அறிவித்தார் மார்க் சக்கர்பெர்க்.
ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்திற்கோ, பத்திரிகைக்கோ எழுதாமல் சுயாதீனமாக எழுதுபவர்கள் சப்ஸ்டாக் போன்ற செய்திமடல் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம், எழுதுபவர் எந்த நிறுவனத்தையும் சாராமல், தங்கள் எழுத்தை விரும்பி வரும் வாசகருக்கு நேரடியாக ஒருவரது மின்னஞ்சல் மூலம் தங்கள் கட்டுரையையோ அல்லது படைப்பையோ வழங்க முடியும். இதற்குச் சந்தா வசதியும் உண்டு என்பதால், ஒரு வாசகர் தான் விரும்பிய எழுத்தாளரின் படைப்பை மட்டும் சந்தா செலுத்திப் பெற முடியும்.

இதுவரை பெரிய அளவில் இது போன்ற தனிப்பட்ட செய்திமடல் தளங்களை எழுத்தாளர்கள் பயன்படுத்தாமல் இருந்து வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட வேலையிழப்புகள் காரணமாக நிறைய எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் தனிப்பட்ட முறையில் இது போன்ற செய்திமடல் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதுவரை பெரிய போட்டி எதுவும் இல்லாமல், 'Substack' தளமே முதன்மையாக விளங்கிவரும் நிலையில், தற்போது ஃபேஸ்புக் 'Bulletin' என்ற இந்த செய்திமடல் தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்விட்டரும் 'Revue' என்ற செய்திமடல் தளத்தைக் கையகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வரும் காலத்தில் ட்விட்டரும் தன்னுடைய சொந்த செய்திமடல் தளத்தை வெளியிடும் வாய்ப்புகள் இருக்கின்றன.
Also Read: புதிய டிஜிட்டல் கொள்கையை மதிக்காத ட்விட்டர்... இந்தியரல்லாத ஒருவர் குறைதீர்ப்பு அதிகாரியாக நியமனம்!
ஃபேஸ்புக்கின் இந்தச் செய்திமடல் தளம், ஃபேஸ்புக்குடன் இணைந்தது போல் அல்லாமல் தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சந்தா செலுத்தும் வகையில் பல எழுத்தாளர்களின் கணக்குகள் இருந்தாலும், இலவசமாகப் படிக்கும் வகையிலும் இதில் உள்ளடக்கங்கள் இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறது ஃபேஸ்புக். நாம் விரும்பிய எழுத்தாளருக்கும் ஃபேஸ்புக் பே மூலம் பணம் செலுத்தி சந்தா செய்து கொள்ளலாம். 2023 வரை அந்த சந்தாவில் எந்த விதமான பிடித்தமும் இன்றி முழுவதுமாக அது எழுதுபவரையே சென்று சேரும் எனவும் தெரிவித்திருக்கிறது ஃபேஸ்புக்.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடன் இந்தத் தளம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுவும் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பு மட்டுமே தற்போது இருக்கிறது. அமெரிக்கர் அல்லாத எழுத்தாளர்கள் இரண்டு பேர் மட்டுமே தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், 'Bulletin' உலகம் முழுவதுமே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் தளம்தான். இதன் சோதனைக்குப் பின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களும் இதில் இணைக்கப்படுவார்கள் என Bulletin தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Latest News https://ift.tt/3AdKR4w
0 Comments