https://ift.tt/3vXo9dz Questions: நம்பிக்கை அளிக்கும்படி கொரோனாவுக்கு புதிய மருந்துகள் ஏதேனும் விரைவில் வருமா?

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்வகையில் இனிவரும் நாள்களில் ஏதேனும் மருந்துகளை எதிர்பார்க்கலாமா?

- பவானி (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவரும், ஐசிஎம்ஆரின் நேஷனல் கோவிட் டாஸ்க் ஃபோர்ஸின் கிளினிகல் ரிசர்ச் குழுவைச் சேர்ந்தவருமான குமாரசாமி.

``கோவிட் தொற்றுக்குள்ளானவர்களை அறிகுறிகளற்றவர்கள், குறைந்த பாதிப்புள்ளவர்கள், மிதமான பாதிப்புள்ளவர்கள் மற்றும் தீவிர பாதிப்புள்ளவர்கள் என்று வகைப்படுத்தலாம். இவர்களில் அறிகுறிகளற்ற 60 சதவிகிதம் பேருக்கு எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது. அதனால் அவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறோம். சிலருக்கு தொண்டைவலி, மிதமான காய்ச்சல், இருமல் இருக்கலாம். தேவையிருந்தால் ஆன்டிபயாடிக்கும், பாராசிட்டமாலும் கொடுக்கிறோம். அடுத்த பிரிவினருக்கு மூச்சு வாங்குதல், உறுப்புகள் பாதிப்பு, ஏற்கெனவே உள்ள பாதிப்புகள் தீவிரமாதல் போன்றவை ஏற்படலாம். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இப்படி ஒவ்வொருவருக்குமான சிகிச்சைகள் வேறுபடும்.

எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கும்வகையில் பொதுவான ஒரு மருந்துக்கான ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. தொற்று வந்த 7 முதல் 10 நாள்களுக்குள் இந்த மருந்தைக் கொடுத்துவிட்டால் அவரது உடலில் வைரல் லோடு குறைவதோடு, அடுத்தவருக்குப் பரப்புவதும் கட்டுப்படுத்தப்படும். விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.

மோனோகுளோனல் ஆன்டிபாடி என்ற மருந்து குறைந்த மற்றும் மிதமான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலும் இந்த மருந்து கிடைக்கிறது. இரண்டு மருந்துகளின் கலவை இது. இந்த மருந்தை ஒரு டோஸ் இன்ஜெக்ஷன் மூலம் தொற்று ஏற்பட்ட 7 முதல் 10 நாள்களுக்குள் கொடுத்துவிட்டால், வைரஸ் உள்ளே பெருகுவதைத் தடுக்கும். ஆனால், இதன் விலை கிட்டத்தட்ட ரூ.60,000. தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு இது உதவாது. அமெரிக்காவில் ட்ரம்ப் எடுத்துக்கொண்ட ஆன்டிபாடி காக்டெயில்தான் இது.

COVID-19 vaccine

Also Read: Covid Questions: கோவிட் சிகிச்சையில் ஆன்டிபாடி காக்டெயில் மருந்து யாருக்கு பரிந்துரைக்கப்படுகிறது?

முதல் அலையில் பரபரப்பாகப் பேசப்பட்ட பிளாஸ்மா தெரபியும் பெரிய அளவில் பலன் தரவில்லை என்று தெரிய வந்தது. ஆனால் அதே பிளாஸ்மா சிகிச்சையை ஆரம்பத்திலேயே கொடுத்தால் பலன் கிடைக்குமா என்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 6 முதல் 12 மாதங்களுக்குள் நம்பிக்கையளிக்கும் நிறைய மருந்துகள் வரவிருக்கின்றன. எனவே, பயம் வேண்டாம். அதே நேரம் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். தாமதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன், அதன் பிறகும் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளைக் கழுவுதல் போன்றவற்றைத் தவறாமல் பின்பற்றவும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


from Latest News https://ift.tt/3qAZdY7

Post a Comment

0 Comments