தமிழகத்தின் முதல் திருநங்கை துணை காவல் ஆய்வாளராக 2017-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து பணியில் அமர்த்தப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக, தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவன்யா எனும் திருநங்கை தமிழகத்தின் இரண்டாவது துணை காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த 26-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் கரங்களால் பணி ஆணையைப் பெற்றுள்ளார் இவர்.

எஸ்.ஐ ஆக தேர்ச்சி பெற்றிருக்கும் திருநங்கை சிவன்யாவிடம் பேசினோம். `` திருவண்ணாமலை மாவட்டம், பாவுப்பட்டு கிராமத்தில் வசிக்கிறோம். அப்பா செல்வவேல், அம்மா வளர். விவசாயக் குடும்பம். சின்ன வயசுல நானும் கழனியில் வேலை செய்திருக்கேன். பி.காம் வணிகவியல் படிச்சேன். போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ந்து படிச்சிட்டு வந்தேன். டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுகூட எழுதியிருக்கேன். அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில இருக்கிற ஒரு கோச்சிங் சென்டர்ல சேர்ந்து படிச்சேன். 2019-ம் ஆண்டு நடந்த எஸ்.ஐ தேர்வை எழுதினேன். அதில் வெற்றி பெற்றேன். எத்தனையோ அவமானம், போராட்டங்கள், கேலி, கிண்டல்கள்னு எல்லா கொடுமைகளையும் அனுபவிச்சிருக்கேன்.
மனசு ரொம்ப வலிக்கும். ஆனாலும் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டேன். நாம சாதிக்கணும்ங்கிற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சு. தொடர்ந்து படிச்சேன். வழக்கமா திருநங்கைகளுக்கு ஏற்படும் எல்லா இன்னல்களையும் அனுபவிச்சிருந்தாலும், எனக்கு என் குடும்பம் துணையா இருந்தாங்க. நான் எஸ்.ஐ ஆக தேர்ச்சி அடையும் வரை என்னை படிக்க வச்சு, தூண்டுகோலாக கூட இருந்தது எல்லாமே என் குடும்பம்தான். உடல் தகுதித் தேர்வுக்கு முறையான பயிற்சிகளைத் தொடர்ந்து எடுத்துக்கிட்டேன். இறுதிப் பட்டியல்ல என்னோட பெயர் இருந்தது. சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆய்வாளர் பணி கிடைச்சிருக்கு. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், நான் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் கிடைத்த மாதிரி கடந்த 26-ம் தேதி அன்று தமிழக முதல்வர் அவர்கள் கையால பணி ஆணையை சென்னைக்கு சென்று வாங்கினேன்.

Also Read: சென்னையில் எஸ்.ஐ-யாகக் களமிறங்கினார் திருநங்கை யாஷினி!
இந்த வேலை எனக்குக் கிடைச்சிருக்கிறது, என்னோட கடுமையான உழைப்புக்குக் கடவுள் தந்த பரிசு. எனக்கு என் பெற்றோர்கள் உறுதுணையா இருந்தது போல, எல்லா திருநங்கைகளுக்கும் அவங்களோட பெற்றோர்களும், இந்தச் சமூகமும் உதவியாக இருக்கணும். படிப்புதான் பற்றுனு உணர்ந்து திருநங்கை சகோதரிகள் அதில் கவனம் செலுத்தி ஜெயிக்கணும்'' என்றார்.
சகோதரியின் பணி சிறக்க வாழ்த்துகள்!
from Latest News https://ift.tt/3j5chBX
0 Comments