https://gumlet.assettype.com/vikatan/2021-07/56a17763-fbc5-422f-8bfd-9dd873f5bae6/Untitled.png`இது முத்தமிடும் பகுதியல்ல' - மும்பை குடியிருப்பு கட்டட நிர்வாகத்தின் அறிவிப்பால் சர்ச்சை

`இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது', `இங்கு அசுத்தம் செய்யாதீர்' , `இங்கு எச்சில் துப்பாதீர்' என்ற அறிவிப்புக்கள் எழுதப்பட்ட பகுதியை நம்மால் பல இடங்களில் காண முடியும். ஆனால் எங்காவது இங்கு முத்தமிடக்கூடாது என்ற அறிவிப்பை பார்த்ததுண்டா என்று கேட்டால் அனைவரும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் மும்பையில் அது போன்ற ஒரு அறிவிப்பு வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை போரிவலியில் உள்ள சத்யம் சிவம் சுந்தரம் என்ற கட்டடத்திற்கு வெளியில்தான் இது போன்ற ஒரு எச்சரிக்கை அறிவிப்பை எழுதி வைத்திருக்கின்றனர். மாலை நேரத்தில் இக்கட்டடத்துக்கு வெளியில் இருக்கும் சாலையோரம் ஜோடிகள் இரு சக்கர வாகனங்களில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இருட்ட ஆரம்பித்து விட்டால் சிலர் முத்தமிட்டுக்கொள்வதும் வழக்கமாகும். ஆனால் இது அக்கட்டடத்தில் வசிப்பவர்களை முகம் சுழிக்கவைக்கப்பதாக இருந்தது. உடனே ``இது முத்தமிடும் பகுதியல்ல” என்று அறிவிப்பு எழுதிப்போட்டுள்ளனர்.

கரண், ருச்சி தம்பதி

இது குறித்து அக்கட்டடத்தில் குடியிருப்பவர்களிடம் கேட்டதற்கு, ``கொரோனா பொதுமுடக்க காலத்தில்தான் ஜோடிகள் இங்கு வந்து மாலை 5 மணிக்கு மேல் பேசிக்கொண்டிருக்க ஆரம்பித்தனர். அவர்களில் சிலர் தங்களுக்குள் முத்தமிட்டுக்கொண்டனர். ஓரிரு முறை முத்தமிட்டுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் தொடர்ச்சியாக முத்தமிடும் போது அது சில நேரங்களில் எல்லை மீறிவிடுகிறது. முத்தமிடக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்த பிறகு இங்கு வரும் தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு சிலர்தான் வருகின்றனர். அவர்களும் செல்பி எடுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்” என்றனர்.

Also Read: `மாஸ்க் அணிந்தால் கணவருக்கு எவ்வாறு முத்தம் கொடுப்பது?' - போலீஸிடம் வாக்குவாதம் செய்த பெண்

இது குறித்து அக்கட்டடத்தின் தலைவர் வழக்கறிஞர் வினய் கூறுகையில், ``சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி முத்தமிட்டுக்கொள்வது என்பது தவறில்லை தான். ஆனால் பல நேரங்களில் அது ஆபாசமாகிவிடுகிறது. நாங்கள் தம்பதிகள் அல்லது ஜோடிகளுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் எங்களது வீட்டிற்கு வெளியில் ஆபாச செயலில் ஈடுபடுவதைத்தான் எதிர்க்கிறோம். கொரோனா பொதுமுடக்க காலத்தில்தான் தம்பதிகள் அதிக அளவில் வர ஆரம்பித்தனர்.

இது குறித்து உள்ளூர் போலீஸாரிடம், கவுன்சிலரிடமும் புகார் செய்தோம். ஆனால் எந்த வித பயனும் இல்லை. எனவேதான் நாங்களே இக்காரியத்தில் இறங்கியிருக்கிறோம். இரண்டு மாதத்திற்கு முன்பு கட்டடத்திற்கு எதிரில் இருக்கும் சுவரில் பெயிண்ட் அடித்து இங்கு முத்தமிடாதீர்கள் என்று எழுதிப்போட்டுள்ளோம். தம்பதிகளிடமும் தனிப்பட்ட முறையிலும் இது தொடர்பாக கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

அக்கட்டடத்தில் வசிக்கும் கரண் - ருச்சி பாரிக் தம்பதி இது குறித்து கூறுகையில், ``இரு சக்கர வாகனங்களில் வரும் தம்பதி வாகனத்தில் இருந்த படியே பேசிக்கொண்டிருந்துவிட்டு அப்படியே முத்தமிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். எங்களது வீட்டு ஜன்னலை திறந்தாலே இது போன்ற காட்சிகளை பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உடனே அதனை வீடியோ எடுத்து உள்ளூர் கவுன்சிலருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவர் அவற்றை போலீஸாருக்கு அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். தினம் தினம் நடக்கும் இச்செயலால் வெறுத்துப்போய் இது குறித்து கட்டடத்தின் தலைவரிடம் பேசி சுவற்றில் பெயிண்ட் அடித்து இங்கு முத்தமிடாதீர்கள் என்று எழுதி வைத்தோம். இப்போது இது செல்ஃபி பாயிண்டாக மாறிவிட்டது” என்று தெரிவித்தனர்.

அறிவிப்பு

இது குறித்து அங்கு வந்த ஒரு தம்பதியிடம் கேட்டதற்கு, ``பொதுமுடக்க காலத்தில் கார்டனை ஒட்டிய ரோடு காலியாக இருந்ததால் அதில் வாகனங்களை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அறிவிப்பு எழுதி போட்ட பிறகு வைத்த பிறகு நாங்கள் அங்கு நின்று பேசிக்கொண்டிருப்பதில்லை. ஆனால் இது தம்பதிகளுக்கு எதிரான நடவடிக்கை. நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. எப்போதாவது முத்தமிட்டுக்கொள்வோம். தம்பதிகள் அமர்ந்து பேச மும்பையில் இடமில்லை” என்றனர்.

Also Read: மும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர்! - சிக்கிய முன்னாள் மேலாளர்

மற்றொரு தம்பதி இது குறித்து கூறுகையில், ``முத்தமிடுவது குற்றமோ ஆபாசமோ கிடையாது. எங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறோம். கட்டட நிர்வாகம் பெயிண்டை அழிக்க வேண்டும். ரோடு யாருக்கும் சொந்தமானது கிடையாது” என்று தெரிவித்தார். கட்டட நிர்வாகமும் யாரிடமும் கேட்காமல் இது போன்று பெயின்ட் அடித்திருக்கிறது. இந்த அறிவிப்பு, சர்ச்சையை கிளப்பி இருப்பதோடு தம்பதிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.



from Latest News https://ift.tt/2WzKQs9

Post a Comment

0 Comments