https://gumlet.assettype.com/vikatan/2021-07/c8a814ad-edbe-4d2c-a25d-c610389f2160/Himanta_Biswa___PTI.jpgதுப்பாக்கிச் சூடு விவகாரம்: அஸ்ஸாம் முதல்வர் மீது வழக்கு தொடர்ந்த மிசோரம்!

சமீபத்தில் அஸ்ஸாம், மிசோரம் மாநிலங்களின் எல்லைப்பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma) உள்ளிட்ட அம்மாநிலத்தில் பல முக்கிய அதிகாரிகளின் மீது மிசோரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் முதல்வர் சர்மா மற்றும் அஸ்ஸாம் காவல்துறையின் மூத்த அதிகாரிகளின் மீது கொலை முயற்சி மற்றும் குற்றச் சதி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது .

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களும் 162 கிலோ மீட்டர் அளவுக்கு தங்களின் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் 1995-ம் ஆண்டு முதல் எல்லை பிரச்னை நிலவி வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இதுவரை அந்த பிரச்னைக்கு எந்த ஒருதீர்வும் ஏற்படவில்லை. இதன் காரணமாக அந்த பகுதிகளில் அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அஸ்ஸாம் மாநிலத்தின் சச்சாரின் மாவட்டத்தில் உள்ள லைலாபூரில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மிசோரம் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மையம் அமைத்தனர். இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பெரும் வன்முறையும் அங்கு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி மிசோரம் மாநிலத்தின் கொலாசிப் மாவட்டத்தில் உள்ள வெய்ரன்ட் கிராமத்தில் இரண்டு மாநில காவல்துறைக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் இரண்டு மாநில காவல்துறையினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் அஸ்ஸாமை சேர்ந்த ஆறு காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்தனர். நிலைமை மோசமடையாது இருக்க இரண்டு மாநில எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாது பிரச்னைக்குரிய இடங்களில் துணை ராணுவத்தினர் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை

``இந்த வன்முறை தொடர்பாக மிசோரம் காவல்துறை சார்பில் அஸ்ஸாம் முதல்வர், காவல்துறை உயரதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஜி அனுராக் அகர்வால், டிஐஜி தேவ்ஜோதி முகர்தி, கச்சார் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் நிம்பல்கர், காவல் நிலையப் பொறுப்பாளர் சனாப் உதின், துணை ஆணையர் கீர்த்தி ஜாலி, வனத்துறை அதிகாரி சன்னிதியோ சவுத்ரி மீதும், இது தவிர அடையாளம் தெரியாத 200 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று மிசோரம் ஐஜி ஜான் நேஹாலியா கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு பிரச்னைக்கு அஸ்ஸாம் சார்பில், ``கச்சார்-கொலாசிப் எல்லையில் உள்ள காடுகளின் வழியாகப் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நாளில் அந்த கடத்தல் நடந்திருக்கலாம். இதற்கு மிசோரம் அரசியல் ரீதியான தொடர்பும் இருக்கலாம். சமீபகாலங்களாக எல்லை பிரச்னையை விட இதுபோன்ற ஏற்படும் பிரச்னைகள் அதிகம்" என்று கூறியுள்ளது. மிசோரம் சார்பில், ``சம்பவம் நடைபெற்ற தினம் 200-க்கும் அதிகமான அஸ்ஸாம் காவல்துறையினர் மிசோரம் பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தனர். மிசோரம் காவல்துறையினர் தாக்குதல் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் சார்பில், நடைபெற்ற கலவரம் தொடர்பாக மிசோரம் கொலாசிப் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் உள்ளிட்ட மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட ஆறு அதிகாரிகளை விசாரணைக்கு வரச் சம்மன் அனுப்பியுள்ளார். அதுமட்டுமில்லாது. மிசோரம் அதிகாரிகளின் மீது கொலை, கொலை முயற்சி, குற்றவியல் சதி, கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாநிலங்களிடையே நிலவும் பிரச்னை தொடர்பாக இரண்டு மாநில முதல்வர்களிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைப்பேசி வாயிலாகப் பேசியுள்ளார். எல்லை பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண அறிவுறுத்தியுள்ளார். இரண்டு மாநில முதல்வர்களும் அதற்கு சுமுகமாகப் பிரச்னையைச் சரிசெய்து கொள்வதாக உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read: எல்லை பிரச்னை:`கொல்லப்பட்ட அஸ்ஸாம் காவலர்கள்; கைதட்டிக் கொண்டாடும் மிசோரம்?!'-என்ன நடக்கிறது அங்கே?



from Latest News https://ift.tt/3ieOa4n

Post a Comment

0 Comments