''டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என்னுடைய ஒரே இலக்கு'' என தீர்க்கமான மனதோடு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சஞ்சீவ் ராஜ்புட். முன்னாள் கடற்படை வீரரான இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 50 மீ ரைஃபிள் 3P பிரிவில் பங்கேற்க இருக்கிறார். இவர் பங்கேற்கும் போட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற இருக்கிறது.
40 வயதாகும் சஞ்சீவ் ராஜ்புத் ஹரியானாவின் ஜகத்ரி எனும் சிறு நகரத்தில் பிறந்தவர். ஒரு விளையாட்டில் பெரிய உயரத்தை தொடுபவர்கள் பொதுவாக சிறு வயதிலிருந்தே அந்த விளையாட்டில் தன்னை அர்ப்பணித்திருப்பார்கள். சஞ்சீவ் அப்படி சிறு வயதிலிருந்தே துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்றவர் இல்லை.

18 வயதில் இந்திய கடற்படை பணிக்கு தேர்வாகியிருக்கிறார். அங்கே துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்துதான் ஊக்கம் பெற்று துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். கடற்படையில் கப்பல்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகளின்போது துப்பாக்கி சுடுதலில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்ய, அதிலிருந்து அப்படியே படிப்படியாக உயர்ந்திருக்கிறார். 2004 தெற்காசிய போட்டிகளில் வெள்ளி வென்றிருந்தார். 2006, 2010, 2014, 2018 என நான்கு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் 2 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றிருந்தார். இதற்கு முன்பே 2 முறை ஒலிம்பிக்கிலும் ஆடியிருக்கிறார்.
2008 மற்றும் 2012 ஒலிம்பிக்கில் 50 மீ ரைஃபிள் ப்ரோன் மற்றும் 3P பிரிவுகளில் பங்கேற்றவர் இரண்டு ஒலிம்பிக்கிலும் 26வது இடமே பிடித்தார். 2016 ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்கான இடஒதுக்கீட்டில் சஞ்சீவ் ஒலிம்பிக்கிற்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில் அந்த டிக்கெட் ஸ்கீட் ஷூட்டர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இல்லையேல் தொடர்ச்சியாக சஞ்சீவ் நான்காவது ஒலிம்பிக் தொடராக டோக்கியோ ஒலிம்பிக் இருந்திருக்கும். இப்போதைய டோக்கியோ ஒலிம்பிக் இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியில் ஒலிம்பிக் அனுபவப்படி சீனியர் இவரே. 2016-லிருந்து இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
2019 ISSF உலகக்கோப்பையில் 50 மீ ரைஃபிள் 3P பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றார்.

கடந்த இரண்டு முறையும் பதக்க வாய்ப்பை தவறவிட்டதால் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ''40 வயதுக்கு மேல் பதக்கம் வெல்ல முடியுமா என்கிற சந்தேகம் எல்லாம் எனக்கில்லை. நிறைய வீரர்கள் 50 வயதிற்கு மேலயே கூட பதக்கம் வென்றிருக்கின்றனர். எனக்கு அவர்கள்தான் இன்ஸ்பிரேஷன். டோக்கியோவில் தங்கம் வெல்வதே என்னுடைய ஒரே லட்சியம்'' என்கிறார் சஞ்சீவ் ராஜ்புத்.
from Latest News https://ift.tt/3ielA30
0 Comments