முதல் அத்தியாயத்திலேயே சொன்னதைப்போல ரவி, அவன் பிறந்து வளர்ந்த தெங்கம்புதூர் கிராமத்தைத் தாண்டி எங்குமே சென்றவனில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், வீடு, அவன் படிக்கும் அரசு நடுநிலைப்பள்ளி, சங்குத்துறைக் கடற்கரை. இந்த மூன்றையும் தவிர்த்து அவனுக்குத் தெரிந்த ஓர் இடம் உண்டென்றால் அது அம்பலப்பதி. வாரம் தவறாமல் அவனையும், அவன் தம்பி சந்திரனையும் அவனுடைய அம்மா விஜயா அழைத்துச் சென்றுவிடுவாள். தெங்கம்புதூரிலிருந்து அம்பலப்பதி செல்வதற்குப் பேருந்து வசதி கிடையாது என்பதால், அங்கிருக்கும் வண்டிப்பாதை வழியாகவும், நடுவில் குறுக்கிடும் கொல்லந்தோப்பு வழியாகவும் நடந்தே சென்று, நடந்தே திரும்பி வருவர். வண்டிப்பாதையில் நடந்து செல்வதைக் காட்டிலும் முந்திரித் தோப்பு வழியே நடக்கையில், மர நிழலும் அதில் தங்கியிருக்கும் அமானுஷ்ய உணர்வும் ரவிக்கு திகிலைக் கொடுக்கும். திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடப்பான். ஒருமுறை விஜயாதான் அவனிடம், ``இப்படி கொல்லாந்தோப்பு வழியா நடக்கிறப்ப ஏதாச்சும் சத்தம் கேட்டுச்சுன்னா திரும்பிப் பார்க்கக் கூடாது. ஏன்னா அது முத்தாரம்மனாக்கும்” என்று சொல்லவும், ரவி, ``முத்தாரம்மன் சாமிதானம்மா. சாமியப் பார்த்தா தப்பா?” என்று கேட்டான். அதற்கு விஜயா, ``முத்தாரம்மன் சாமிதான்.
செல சமயம் நீலிகளும் நடமாடிட்டு இருக்கும். இந்த நீலிகளெல்லாம் குரல் மாத்திப் பேசுற சக்தி படைச்சதுங்க. திரும்பிப் பார்த்தேன்னா ஒரே அடிதான். ஆளைக் கொன்னு, அவங்க ரத்தத்தை உறிஞ்சி குடிச்சுடும்” என்றாள்.
அன்றைய தினம் புத்தகங்கள் திணித்துவைக்கப்பட்டிருந்த ஒயர் கூடையைத் தோளில் தொங்கவிட்ட படி ரவி அம்பலப்பதிக்குச் செல்லும் பாதையில் தனியே நடந்துகொண்டிருந்தான். பள்ளிக்குச் செல்வது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதைத் தவிர்த்து, அம்பலப்பதிக்குச் சென்று என்ன செய்வது என்கிற விசேஷத் திட்டமெல்லாம் அவனுக்குள் எதுவுமில்லை. வழியில் தெரிந்தவர்கள் யாரேனும் தன்னைப் பார்த்து, அதை அம்மாவிடம் சென்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்கிற பயமும், ஏற்கெனவே அவனுடைய அம்மா சொல்லியிருக்கும் முத்தாரம்மன், நீலி கதைகளும் அவனுள் உறைந்துப் போயிருந்ததால், மிக கவனமாக வந்த வழியை மட்டும் திரும்பிப் பார்க்காமல், சுற்றுமுற்றும் கண்களை மேயவிட்டபடியே நடந்துகொண்டிருந்தவனை, எங்கிருந்தோ கேட்ட ``டேய் மருமவனே...’’ என்கிற குரல் தடுத்து நிறுத்தியது.
குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்க்காமல், மீண்டுமொரு முறை அதே குரல் கேட்டால் திரும்பிப் பார்க்க வேண்டும், இல்லையென்றால் ஓடிவிட வேண்டுமென முடிவு செய்து ஒரு நொடி நின்றான். மீண்டும் குரல் கேட்கவில்லை. மனதினுள் அய்யா வைகுண்டரையும், அவன் வீட்டினருகிலிருக்கும் முத்தாரம்மனையும் நினைத்துக்கொண்டு, முதல் இரண்டு அடியை மெதுவாகவும், பின்னர் வேகமாகவும் எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தான்.
``டே மருமவனே நில்லுடா. என்னால ஒன் அளவுக்கு வேகமா நடக்க முடியலை” இம்முறை மிகத் தெளிவாக அவன் முதுகுப்புறமிருந்து அந்தக் குரல் ஒலித்தது.
கண்டிப்பாக இது நீலிதான். குரலை மாற்றிப் பேசுகிறது என்று முடிவு செய்தவன் ஓட ஆரம்பித்தான்.
``ஏலேய் ரவி நில்லுல. நாந்தான் பால்ராஜ்” என்றது அந்தக் குரல்.
பால்ராஜ் என்கிற பெயரைக் கேட்டதும், ஒரு நொடி நின்றான். அடுத்து அவன் ஓடத் தொடங்கும் முன்பாக அவன் தோளில் கனமாய் ஒரு கை அழுத்தியது.
உடல் நடுநடுங்க திரும்பினான் ரவி. அங்கே அவன் தந்தையின் நண்பரான பால்ராஜ் நின்றுகொண்டிருந்தார்.
வாசகர்களுக்கு இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன். சென்ற அத்தியாயத்தில் வந்த நாகராஜனையும், இந்த அத்தியாயத்தில் வரும் பால்ராஜையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் வரும் அத்தியாயங்களில் இந்த இருவரில் ஒருவர் ரவியாலும், மற்றொருவர் ரவி சாகவும் காரணமாக இருக்கப்போகிறார்.
``மா….ம்ம்….மா” என்று பயத்தோடு ரவி பிதற்றினான்.
``எங்க மருமவனே பள்ளியோடத்துக்கு போவாம இங்க சுத்திட்டு இருக்கிற...”
எதிர்பாராமல் சிக்கிக்கொண்டதால் வெளவெளத்துப்போன ரவி, பீதியடைந்த முகத்தோடு, ``இல்லை மாமா… சும்மாதான்… இந்தப் பக்கமா…” என்று இழுத்தான்
அவனது பீதியடைந்த முகத்தைப் பார்த்து உரக்கச் சிரித்தபடியே பால்ராஜ், ``என்ன மருமவனே ஸ்கூல கட்டடிச்சிட்டு போறியா?”
பால்ராஜ் அப்படி நேரடியாகக் கேட்டதும், ரவிக்கு செய்வதறியாது அழுகை வந்துவிட, அழுதபடியே ``அம்மாகிட்ட சொல்லிடாதீங்க மாமா...”
``இப்ப ஏன் மாரி அழுவுற..? பள்ளியோடம் போவ பிடிக்கலை. அதான் போகலை. சரி, இப்ப எங்க போயிட்டு இருக்க..?” என்று ஆறுதலாக ரவியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி பால்ராஜ் கேட்டார்.
``அம்பலப்பதிக்கு மாமா. அம்மாட்ட சொல்லிட மாட்டீங்கள்ல...”
``நான் எதுக்கு மாரி சொல்லப் போறேன்..?” எனக் கேட்டவர், ஒரு நொடி நிதானத்துக்குப் பிறகாக, ``ஆமா, அம்பலப்பதிக்கு எதுக்கு போற” என்று கேட்டார்.
``வேற எங்க போறதுன்னு தெரியலை மாமா.”
``அப்படியா..? சரி. எங்கூட வா” என்று சொல்லிவிட்டு அவன் கையைப் பற்றிக்கொண்டார்.
பால்ராஜ் ரவியை நெருங்கி அவன் கையைப் பற்றிக்கொள்கையில் அவருடைய உடலிலிருந்து வேப்பெண்ணெயின் மணத்தோடு அழுகிய பழங்களின் நாற்றமும் வெளியேறியதை ரவி உணர்ந்தான்.
``என்ன மருமகனே, முகத்தைச் சுளிக்கிற..? ஓ அரிஷ்டத்தோட வாசம் ஒனக்கு ஒத்துக்கலியா..?” எனக் கேட்டுவிட்டு, ``உங்கப்பன் இருந்த வரைக்கும் தேன் மாதிரி சாராயத்தை இறக்கிட்டு இருந்தான். ஆனாலும் உங்கப்பனுக்கு இப்படி ஒரு சாவு வந்திருக்கக் கூடாது.” சாவு வந்திருக்கக் கூடாது என்ற வாக்கியத்தைப் பால்ராஜ் சொல்கையில் அவரது குரல் சற்று உடைந்துபோனதை ரவி கவனித்தான்.
நிமிடத்தில் நிதானத்துக்கு வந்த பால்ராஜ், தொண்டையைச் செறுமி, தொண்டையில் கட்டியிருந்த கபத்தைக் காறி உமிழ்ந்தார். பின்னர், ``ஏன் மருமகனே, போறதுக்கு வேற போக்கெடமே இல்லைன்னா அம்பலப்பதிக்கு போற..!”
``வேற எங்க போறதுன்னு தெரியலை மாமா.”
``பஸ் ஏறி நாரோயிலுக்கு போயி, படம் பார்த்துட்டு வரவேண்டிதுதான...”
``எனக்கு வழி தெரியாது மாமா” என்று வெகுளியாக ரவி சொல்லவும், சத்தமாகச் சிரித்தார் பால்ராஜ்.
``ஏண்டா மருமகனே, நம்ம மாவட்டத்துல உங்கொப்பனுக்கு தெரியாத ஒரு தெருவும் கிடையாது. உங்கொப்பனத் தெரியாத எந்தத் தெருவும் கிடையாது. ஆனா நீ என்னடான்னா வழி தெரியாதுன்னு சொல்லிட்டு பதிக்குப் போயிட்டு இருக்க... பதிக்கு போற வயசா மருமவனே உனக்கு..? நீ உங்கொப்பன மாதிரி இல்லை...” சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார் பால்ராஜ்.
``ஏன் மருமகனே என்னாச்சு” நடந்துகொண்டிருந்த பால்ராஜ் நின்று, கரிசனத்தோடு தலைகுனிந்து நின்றிருந்த ரவியைப் பார்த்துக் கேட்டார்.
``ஸ்கூல்ல என்னன்னா உங்கப்பன மாதிரி வரலாம்னு பார்க்குறியான்னு வாத்தியானுங்க அடிக்கிறானுங்க. கூடப் படிக்கிறவனுங்க என் உருவத்தைவெச்சு ஊசி ஊசின்னு கிண்டல் பண்றானுங்க. வீட்டுல வந்து அம்மைகிட்ட இதைச் சொன்னா, இந்த ஒரு வருஷம் இங்கயே படி. அடுத்த வருஷம் ஒம்பதாம் கிளாஸுக்கு எஸெல்பி ஸ்கூல்ல சேத்துவிடறேன்னு சொல்லுறா. இப்ப நீங்களும் நான் எங்கப்பா மாதிரி இல்லைன்னு சொல்றீங்க. சந்திரன் இப்பவே என்னவிட உயரமாவும் வன்னமாவும் இருக்கான். அவன ஸ்கூல்ல எந்தப் பையனும், எந்த வாத்தியானும் எதுவுமே சொல்றதில்லை. நான் ஏன் மாமா எங்கப்பா மாதிரி இல்லாமப் போயிட்டேன்” இதைச் சொல்லி முடிக்கையில் கேவிக் கேவி அழ ஆரம்பித்திருந்தான் ரவி.
``லேய்... லேய்... ஏம்ல இப்ப பொட்டப்புள்ள மாதிரி அழுதுட்டு இருக்க..? ஒரு நிமிசம் இங்கயே நில்லு. இந்தா வரேன்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாகச் சாலையோரமாக இருந்த பெட்டிக்கடைக்குச் செல்வதை வேடிக்கை பார்த்தபடியே நின்றான் ரவி.
பெட்டிக்கடைக்குச் சென்றவர், கடையிலிருந்து ஒரு குப்பியை வாங்கி அந்தக் கடையிலிருந்த சர்பத் கோப்பையில் அதை ஊற்றினார். அந்த திரவத்தை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, அந்தக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த பாளையங்கொட்டைப் பழத்தில் இரண்டை உரித்து வாயில் போட்டுக்கொண்டார். பின்னர் மேலும் இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டு ரவியிடம் வந்தார். இப்பொழுது அவர் உடலிலிருந்த வேப்பெண்ணெய் மணம் சுத்தமாக மறைந்து அழுகிய பழத்தின் வீச்சு குடியேறியிருந்தது. ``மருமகனே வா, நாம அந்தப் பக்கமா போய் நிழல்ல ஒக்காந்து கத பேசுவோம்” என்று அவனையும் அழைத்துக்கொண்டு சாலையோரமாக வளர்ந்து நின்ற கொல்லமரத்தின் கீழே சென்று அமர்ந்தார்.
``ஏன்?”
``ஏன்னா, அவன் அப்படி நின்னான். எவ்ளோ பெரிய பிரச்னைன்னாலும் ஒத்தைக்கு நிப்பான். மேக்கருந்து சாராயா லோட ஒத்த ஆளா கட்டுமரத்துல துடுப்பு போட்டு, இங்க கொண்டு வந்துடுவான். கூட இருக்க ஒருத்தனயும் நம்ப மாட்டான். எங்க தோள்ல கையைப் போட்டு பேசினாலும் கண்ணு மட்டும் கருத்தா பார்த்துட்டே இருக்கும். ஒன்ன மாதிரி கண்ணு அங்கே இங்கேன்னு எல்லாம் அலைபாயாது” பேசிக்கொண்டிருந்தவர், தொண்டையைச் செறுமி காறி உமிழ்ந்தார். அவரது சளி மஞ்சளும் அல்லாமல் பச்சையும் அல்லாமல் இரண்டும் கலந்த நிறத்தில் கொழகொழவென்று இருந்தது.
``அன்னிக்கு ஹை கோர்ட்டுக்கு ஜாமீன் கேட்டு போறப்ப மட்டும் கூட நாலு பேரைக் கூட்டிட்டு போயிருந்தான்னா, அவனுக்கு இப்படி ஒரு அழிவு வந்திருக்காது. ஓட ஓடல்லா வெட்டுனானுக. ஆனாலும் உங்கப்பன் வாயத் தொறந்து ஒரு வார்த்த கத்தலியே... நெஞ்சுரம் ஜாஸ்தி உங்கப்பனுக்கு. உனக்கொண்ணு தெரியுமா மருமகனே, பயப்படுறவனுகதான் வாயால சத்தத்தைப் போட்டுட்டே இருப்பானுக. உங்கப்பன் பயப்படுறவன் கெடயாது. பயமுறுத்தினவன்.” அடிவயிற்றிலிருந்து ஏப்பம் ஒன்று பால்ராஜிடமிருந்து வெளியேறியது.
``உருவம் முக்கியமில்லை, ஊக்கந்தான் முக்கியம்” என்று சொன்னபடியே ரவியின் நெஞ்சைத் தட்டிக் காண்பித்தார் பால்ராஜ். ``ஊக்கம் மருமகனே ஊக்கம்...”
மாம்பட்டையின் வீரியத்தில் பால்ராஜ் பேசிய வார்த்தைகளின் வீரியம் என்னவென்பதை அன்று அவர் அறிந்திருக்கவில்லை.
(திமிறுவான்...)
Also Read: ஊசிப் புட்டான் - சங்குத்துறைக் கடல் - அத்தியாயம் - 1
from Latest News https://ift.tt/2XYpPrW
0 Comments