https://gumlet.assettype.com/vikatan/2021-09/19fe4ce9-5b75-46c9-a3ff-797bb030e3fe/kudankulam.jpg``கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது" -மத்திய அரசுக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 100 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்ததாக 3 மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அத்துடன்,5 மற்றும் 6-வது அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கூடங்குளத்தில் உள்ள முதல் இரு அணு உலைகள்

முதல் இரு அணு உலையில் இருந்து கிடைக்கும் அணுக் கழிவுகளை கூடங்குளம் அணு உலை வளாகத்தின் உள்ளேயே சேகரித்து வைக்க இருப்பதாக இந்திய அணு சக்திக் கழகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக தமிழக சட்டமன்ற சபாநாயகரும் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அப்பாவு இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகில் உள்ள சொந்த ஊரான லெப்பைக்குடியிருப்பில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கூடங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டுவரும் நிலையில் மேலும் பல அணு உலைகளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அப்பாவு

கூடங்குளத்தில் அணு மின் நிலையத்துக்கான திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலாகவே இங்கு அக்கழிவுகளைச் சேமிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் இல்லாத போதிலும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.

கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் அசம்பாவிதம் ஏற்பட்டால் தமிழகத்தின் மாவட்டங்கள் மட்டுமில்லாமல் கேரளா வரையிலான பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது. இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டபோதே அப்போதைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அணுக்கழிவுகளை ரஷ்யாவிற்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Also Read: 3 நாளில் சரி செய்யப்பட்ட கூடங்குளம் இரண்டாவது அணு உலை! - மீண்டும் மின் உற்பத்தி

அதன்பின்னர் ரஷ்யா உடைந்ததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் வாஜ்பாய் காலத்தில் மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தில் அணுக்கழிவுகளை எங்கு சேமிப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், தொடர்ந்து பணிகள் நடந்தது.

அணுக் கழிவுகளை கூடங்குளம் பகுதியில் சேமிக்கக்கூடாது என்று இந்தப் பகுதி மக்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வருகின்றனர். மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது என்பதை மத்திய அரசுக்குக் கோரிக்கையாகத் தெரிவித்துள்ளேன். அதனால் அணு கழிவு மையம் அமைப்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

5,6-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணி

இலங்கை துறைமுகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மிக அருகில் உள்ள நெல்லை மாவட்டத்தில் அணுக்கழிவு மையம் செயல்படுவது உகந்ததல்ல. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் வசிக்காத பகுதியான பாலைவனம் போன்ற பகுதிகளில் தான் பொக்ரான் வெடிகுண்டு சோதனையை நடத்தினார்.

மக்கள் வாழத் தகுதியற்ற இடங்களில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட வேண்டும் அதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வரை மனு கொடுத்துள்ளேன். மத்திய அரசிடமும் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்.

பேட்டியளித்த அப்பாவு

அணுக் கழிவுகளை மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே இந்தப் பகுதியில் பலருக்குப் புற்றுநோய் உள்ளது. கூடங்குளம் அணுஉலையின் காரணமாகவே புற்றுநோய் வருவதாக மக்கள் பேசுகிறார்கள். அதனால் அணுக்கழிவு சேமிப்பு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.



from Latest News https://ift.tt/2Y7x8OC

Post a Comment

0 Comments