சமீபகாலமாகப் பஞ்சாப் காங்கிரஸில், அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று (செப். 29) ஒரே நாளில் பரபரப்பைக் கிளப்பும் இரு நிகழ்வுகள் அந்தக் கட்சியில் நிகழ்ந்திருக்கின்றன. நேற்றைய தினம், பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் நவ்ஜோத் சிங் சித்து. அடுத்த சில மணி நேரங்களில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்தார். இதையடுத்து இன்று, ``பா.ஜ.க-வில் இணையவில்லை. ஆனால், காங்கிரஸில் நீடிக்க விருப்பமில்லை'' என்று சொல்லி கட்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார் அமரீந்தர். தொடர்ச்சியாகப் பஞ்சாபில் நடந்தவரும் பரபரப்பான நிகழ்வுகள், இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் கவனம் பெற்றுவருகின்றன.
பஞ்சாப் தலைவர் பதவியைச் சித்து ஏன் ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவா? என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.
❛சமரசம் செய்யமுடியாது!❜
கடந்த திங்கட்கிழமை அன்று, பஞ்சாபின் 16-வது முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் சரண்ஜித் சிங் சன்னி. அவரோடு சேர்ந்து 15 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டு இரண்டு நாள்களே ஆன நிலையில், மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து. தனது ராஜினாமா கடிதத்தில், ``ஒரு மனிதனின் குணம், சமரசம் காரணமாகவே சரிவடைகிறது. பஞ்சாபின் வளர்ச்சி, எதிர்காலம் உள்ளிட்ட விஷயங்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது. எனவே, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவேன்'' என்று சித்து குறிப்பிட்டிருக்கிறார்.
சித்துவைத் தொடர்ந்து நான்கு பேர்..!
சித்து ராஜினாமா செய்த சில மணி நேரத்தில், அவருக்கு ஆதரவாக அடுத்தடுத்து நான்கு பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். முதலில், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் குல்ஸார் இந்தர் சிங் சாஹல் (Gulzar Inder Singh Chahal), தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான இவருக்கு, ஒரு வாரத்துக்கு முன்பாகத்தான் மாநிலப் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாகக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, புதிதாக அமைச்சர் பதவியேற்றுக்கொண்ட ராஸியா சுல்தானா (Razia Sultana) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களான யோகிந்தர் திங்ராவும் (Yoginder Dhingra), கௌதம் சேத்தும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
Also Read: பஞ்சாப்: சிக்கலில் பாஜக; விரிசலில் காங்கிரஸ்; முந்தும் ஆம் ஆத்மி! - 2022 தேர்தல் யாருக்குச் சாதகம்?
எதிர்க்கட்சிகள் சொல்லும் காரணங்கள்!
பஞ்சாபின் பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, ``பஞ்சாப் மாநில முதல்வராக, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் சித்து தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்'' என்றிருக்கிறது. பா.ஜ.க-வோ, ``சித்து பஞ்சாப் மாநில எதிர்காலத்தையும், வளர்ச்சியையும் மனதில் வைத்து ராஜினாமா செய்யவில்லை. அவரது சொந்த எதிர்காலத்தை மனதில் வைத்தே ராஜினாமா செய்திருக்கிறார்'' என்று விமர்சித்திருக்கிறது.
சித்து ராஜினாமா பின்னணி என்ன?
சித்து, மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. ``பஞ்சாப் மாநில புதிய அமைச்சரவையில் ராணா குர்ஜித் சிங் இடம்பெற்றிருக்கிறார். இவர், 2017-ம் ஆண்டு அமரீந்தர் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். 2018-ம் ஆண்டு, ராணா மீது மணல் கடத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது மீண்டும் ராணா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சியில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர், ராணா, அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருப்பதற்கு எதிராக மாநிலத் தலைவர் சித்துவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். சித்துவுக்கும் ராணாவை அமைச்சரவையில் சேர்த்தது பிடிக்கவில்லை என்றே தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், சித்துவைத் தொடர்ந்து விமர்சித்துவந்த ராஜ்குமார் வெர்காவும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். வால்மீகி சமூகத்தின் முகமாக ராஜ்குமார் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மேலும், சித்துவின் ஆதரவாளர்கள் பலரையும் தவிர்த்துவிட்டு புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அமைச்சரவை விஷயத்தில் சித்துவின் ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் கட்சி மேலிடம் எடுத்த முடிவுகள், அவரை அதிருப்தியடைச் செய்திருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் மாநிலத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்'' என்கிறார்கள் பஞ்சாப் அரசியலை உற்று நோக்குபவர்கள்.
காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவா?
தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸில் நிலவிவரும் உள்கட்சிப்பூசல்கள் பற்றிப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ``இன்னும் நான்கு, ஐந்து மாதங்களில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கின்றன. இந்த நிலையில், கட்சிக்குள் நடக்கும் இந்தப் பிரச்னைகள் அனைத்தும் காங்கிரஸுக்குப் பின்னடைவைத் தருவது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாகவும் அமையும். பஞ்சாப் காங்கிரஸின் முகமாக இருந்த அமரீந்தர், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். தற்போது சித்துவும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதிருப்தியில் இருப்பவர்களை ஆம் ஆத்மியும், பா.ஜ.க-வும் தங்கள் பக்கம் இழுக்க நினைத்து, அதற்கான வேலைகளை ஆரம்பித்திருப்பார்கள். எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, உள்கட்சிப்பூசல்களை சரிசெய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பஞ்சாப் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்'' என்கிறார்கள்.
Also Read: கெஜ்ரிவாலுடன் சந்திப்பு... பஞ்சாப் தேர்தல்! - பாஜக-வால் குறிவைக்கப்படுகிறாரா நடிகர் சோனு சூட்?!
from Latest News https://ift.tt/3kWxqR2
0 Comments