https://gumlet.assettype.com/vikatan/2021-09/5483c67c-d796-4c4d-b0ad-e4ca096b1f19/IMG_20210930_WA0081.jpgவேலுமணியின் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு; 113 சவரன் தங்க நகை, ஆவணங்கள் பறிமுதல்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் கடந்த மாதம் பணி மாறுதல் பெற்று தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி காந்திமதி முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இவரது அண்ணன் ரவிச்சந்திரன் திருவரங்குளம் யூனியன் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கிறார். தம்பி பழனிவேல் அரசு ஒப்பந்ததாரர். முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளராக இவர் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான எல்இடி பல்பு பொருத்துதல், சாலையில் ஒளிரும் வண்ண விளக்குகள் பொருத்துதல், கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை சப்ளை செய்வது உள்ளிட்ட அரசு ஒப்பந்தங்களையும் இவர்கள் முறைகேடாகப் பெற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

கடுக்காக்காடு வீடு

இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளில் இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக 1260 சதவிகிதம் அதாவது ரூ.15.75 கோடி வரையிலும் அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் கிடைத்ததன் பேரில், வழக்கு பதிவு செய்து செப். 29-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் முருகானந்தம், அவரது சகோதரர்களின் வீடு, வணிக வளாகம் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் திருச்சி, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பிக்கள் மணிகண்டன், இமயவர்மன் தலைமையிலான போலீஸார் 6 குழுக்களாகப் பிரிந்துத் தீவிர சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 15 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் முருகானந்தம், அவரது மனைவி பெயரில் ஏராளமான சொத்துக்கள் இருந்ததும், வருமானத்திற்கு அதிகமாக அவர்கள் சொத்து சேர்த்திருப்பதும் தெரியவந்தது.

இதில், சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தத்தின் வீட்டில் 83 சவரன் தங்க நகைகள், 3.7 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.46,160 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. பழனிவேல் வீட்டிலிருந்து 30 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரது வீட்டிலும் இரண்டு சொகுசு கார்கள், மூன்று இனோவா கார்கள், ரேஸ் பைக்கும் கைப்பற்றப்பட்டன. அதோடு, முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில், "தற்போது அரசு ஊழியராக இருக்கும் முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதியின் பெயரில் புதுக்கோட்டை சார்லஸ் நகர், அண்ணாமலை நகர், சாந்த நாதபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் சொந்தமாக வீடுகள் வாங்கப்பட்டிருக்கிறது.

Also Read: வேலுமணி ரெய்டு... கோட்டைவிட்டதா லஞ்ச ஒழிப்புத்துறை?

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம், புதுக்கோட்டையில் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டு மனைகள், கடுக்கக்காடு கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் 30 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முருகானந்தம்-காந்திமதி தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் கொண்ட தனது மகன் பிரத்யேக பயிற்சி எடுக்க சார்லஸ் நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தையும், மகள் சொகுசாகக் கல்லூரி சென்றுவருவதற்காகப் பல லட்சம் மதிப்பிலான பென்ஸ் காரையும் சமீபத்தில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளில்தான் இவரது வருமானம் பல மடங்காக உயர்ந்திருக்கிறது. இவரது தம்பிகளின் சொத்து மதிப்பும் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது. இதற்கிடையே தான் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை செய்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றிருக்கின்றனர்.



from Latest News https://ift.tt/3uxC1Mv

Post a Comment

0 Comments