கோவிட் தொற்றின் இரண்டாம் அலையில் கறுப்பு பூஞ்சை (Mucormycosis) பற்றி அதிகம் கேள்விப்பட்டோம். இப்போது அது குறைந்துவிட்டது என நிம்மதியடைந்த நிலையில் டெல்லியில் ஒரு கோவிட் நோயாளிக்கு Mucormycosis பாதித்து அவரின் கிட்னியையும் நுரையீரலில் ஒரு பகுதியையும் அகற்றிவிட்டதாக ஒரு செய்தியைப் படித்தேன். இந்தப் பிரச்னை கண்களைத்தானே பாதிக்கும் என்று சொல்லப்பட்டது. கிட்னி, நுரையீரலைக்கூட பாதிக்குமா?அறிகுறிகள் அற்ற கோவிட் நோயாளிகளுக்கும் இந்த பாதிப்பு வருமா? இந்த பாதிப்பு வந்த உடன் என்ன மாதிரியான அறிகுறிகளைக் காட்டும்?
- அக்பர் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ்.
``கோவிட் நோயாளிகளைத் தாக்கும் `மியூகார்மைகோசிஸ்' கறுப்பு பூஞ்சைத் தொற்றானது, அறிகுறிகளற்ற கோவிட் நோயாளிகளையும் தாக்கும் வாய்ப்பு உள்ளது. கோவிட் நோயாளிகள் சுவாசிக்கும் காற்றின் வழியே அவர்களது மூக்கினுள் நுழையும் கறுப்பு பூஞ்சை, மூக்கு, அதன் அருகிலுள்ள சைனஸ் பாதை, கண்கள், அவற்றிலிருந்து மூளை எனப் பரவுவதுதான் இயல்பு. இதை `ரைனோ - ஆர்பிட்டல் செரிப்ரல் மியூகார்மைகோசிஸ்' (Rhino-orbital Cerebral Mucormycosis) என்று அழைக்கிறோம்.
இது தவிர இந்தக் கறுப்பு பூஞ்சைத் தொற்றானது நுரையீரலுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. அது `பல்மனரி மியூகார்மைகோசிஸ்' (Pulmonary Mucormycosis) என்று அழைக்கப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக உள்ள நிலையில் `டிஸ்ஸெமினேட்டடு மியூகார்மைகோசிஸ்' (Disseminated Mucormycosis) பாதிக்கலாம். இது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பரவி, பாதிக்கக்கூடியது. இத்தகைய நிலையில்தான் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலின் அனைத்துப் பாகங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். தாமதிக்காமல் எவ்வளவு விரைவாக மருத்துவரை அணுகி சிகிச்சைகளை ஆரம்பிக்கிறோமோ, அந்த அளவுக்கு அது தீவிரமாகாமல் எளிதில் குணமாக முடியும்.

Also Read: Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
கறுப்பு பூஞ்சைத் தொற்றின் அறிகுறியானது, அது எந்த பாகத்தை பாதிக்கிறதோ, அதைப் பொறுத்து அமையும். மூக்கிலிருந்து கறுப்புநிற திரவம் வடிதல், தலைவலி, முகத்தில் உணர்வுகள் இன்றி மரத்துப்போவது, பற்களில் வலி, பற்கள் ஆடுதல், கண்களை அசைக்கும்போது வலி, பார்வை மங்கலான உணர்வு, காட்சிகள் இரட்டிப்பாகத் தெரிவது, கைகால்கள் செயலிழப்பு, வலிப்பு போன்றவை கறுப்பு பூஞ்சைத் தொற்றின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே அறிகுறிகளற்ற கோவிட் நோயாளிகளாக இருந்தாலும் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது பாதுகாப்பானது."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
from Latest News https://ift.tt/39NyHDo
0 Comments