சென்னை கே.கே.நகர், பாரதிதாசன் காலனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சீதாலட்சுமி (77). இவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவரின் கணவர் குருமூர்த்தி, கடந்த ஆண்டு இறந்துவிட்டார். சீதாலட்சுமியின் மகள் புவனேஸ்வரி துபாயில் வசித்து வருகிறார். மகன் சிவக்குமார், சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். சீதாலட்சுமி மட்டும் தனியாக கே.கே.நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி துபாயிலிருக்கும் சீதாலட்சுமியின் மகள் புவனேஸ்வரி, அவருக்குப் போன் செய்திருக்கிறார். ஆனால், சீதாலட்சுமி போனை எடுக்கவில்லை. அதனால், எதிர்வீட்டில் குடியிருப்பவர்களிடம் விவரத்தைக் கூறி, அம்மா வீட்டில் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டுச் சொல்லும்படி கேட்டிருக்கிறார். அதன்படி எதிர்வீட்டில் உள்ளவர்களும் சீதாலட்சுமியின் வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது வீட்டின் கதவு வெளி பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. அதனால் சீதாலட்சுமி வெளியில் எங்காவது சென்றிருப்பார் எனக் கருதியிருக்கின்றனர். இந்தச் சமயத்தில், எதிர்வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவர், சீதாலட்சுமியின் வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போது, சீதாலட்சுமி படுக்கையறையில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்திருக்கிறார்.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், உடனடியாக சீதாலட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த இன்ஸ்பெக்டர் பூமாறன் தலைமையிலான போலீஸார், கதவை உடைத்து சீதாலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read: `சொத்துக்காகக் கொலை; ஏ.சி விபத்தால் இறந்ததாக நாடகம்!' - மூவர் கொலை வழக்கில் தம்பதி சிக்கியது எப்படி?
அதையடுத்து, சீதாலட்சுமியின் வீட்டில் ஆய்வு செய்த போது, அவர் அணிந்திருந்த தங்கச் செயின்கள், 7 தங்க வளையல்கள் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. ஆனால், சீதாலட்சுமி அணிந்திருந்த நான்கு மோதிரங்கள், கம்மல், மூக்குத்தி ஆகியவை மட்டும் அங்கு இருந்திருக்கின்றன. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், நகைக்காக சீதாலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. அதனால் கொலை வழக்கு, திருட்டு வழக்கு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதே போல், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தனியாக வசித்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest News https://ift.tt/3w0mndt
0 Comments