குறைவான விலையில் 4G ஸ்மார்ட்போன் என்று சொல்லப்பட்டு வந்த ஜியோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் நேற்று வெளியானது. தொலைத் தொடர்பு சேவையிலும், இணையப் பயன்பாட்டிலும் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஒரு புரட்சியே செய்திருந்ததனால், புதிதாக அனைவரும் வாங்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால், நேற்று வெளியான ஸ்மார்ட்போன் நெக்ஸ்ட் 6,500 ரூபாய் விலையில் வெளியாகியிருக்கிறது. 4,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஜியோ ஸ்மார்ட்போனுக்கு 6,500 ரூபாய் என்பது கொஞ்சம் அதிக தொகைதான்.
இந்த விலைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஜியோ போன் இருக்கிறதா?
ஜியோபோன் நெக்ஸ்ட்:
-
5.45 இன்ச் HD+ டிஸ்ப்ளே
-
Qualcomm Snapdragon QM125 ப்ராசஸர்
-
2 GB RAM + 32 GB ஸ்டோரேஜ்
-
13 MP ரியர் கேமரா
-
8 MP செல்ஃபி கேமரா
-
3,500 mAH பேட்டரி
-
ப்ரகதி OS (Pragati OS)
மேற்கூறிய வசதிகளுடன்தான் வெளியாகியிருக்கிறது ஜியோ போன் நெக்ஸ்ட். இந்தியாவுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் இது எனத் தெரிவித்திருக்கிறது ஜியோ. இந்திய மக்களின் தேவைக்கேற்ப கூகுளும் ஜியோவும் இணைந்து உருவாக்கிய ஸ்மார்ட்போன் இது என ட்வீட் செய்திருக்கிறார் சுந்தர் பிச்சை. இந்த ஸ்மார்ட்போனை முழுவதுமாக 6,499 ரூபாய் கொடுத்தும் வாங்கலாம், இல்லையென்றால் முதலில் 1,999 ரூபாய் செலுத்திவிட்டு தவணை முறையில் 4,500 ரூபாயைச் செலுத்தலாம். தவணை முறையில் செலுத்தும்போது ஜியோ போனுக்கான தவணையுடன் டேட்டாவும் சேர்த்து ஒரு பேக்கேஜாகத் தவணைத் தொகை செலுத்தும் வசதியைக் கொடுத்திருக்கிறது ஜியோ.
தீபாவளி முதல் (நவம்பர் 4) இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வரவிருக்கிறது. வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ஜியோமார்ட் ரீடெய்லரை அணுகியோ அல்லது ஜியோ இணையதளத்திலோ பதிவு செய்து ஜியோ ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம். தவணை முறையில் வாங்க விரும்புபவர்களுக்கு 18 மற்றும் 24 மாத இன்ஸ்டால்மென்ட்டில் 4 வகையான ப்ளான்களை வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறது ஜியோ. இந்த தவணையில் டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான ரீசார்ஜூம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ஜியோவின் புதிய ஸ்மார்ட்போன்... முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான் என்ன?
6,500 ரூபாய் என்பது ப்யூச்சர் போன்களைப் பயன்படுத்தி வரும் அடித்தட்டு மக்களுக்கு (அவர்களைக் குறிவைத்துத் தான் ஜியோ இதனை வெளியிட்டிருக்கிறது எனும்போது) பெரிய தொகைதான். மேலும், சில நூறு ரூபாய்களை சேர்த்துக் கொடுத்தாலே இதைவிடச் சிறப்பான ஸ்மார்ட்போன்களை நம்மால் வாங்கிவிட முடியும் எனும் போது இந்த ஜியோ போன் எந்த வகையில் அடித்தட்டு மக்களுக்குப் பலன் கொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. தவணை முறையில் ஸ்மார்ட்போனைக் கொடுப்பதைத்தான் அனைவரும் வாங்கும் வகையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்று கூறியிருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.
மேலும், இந்த ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோவைத் தவிர வேறு சிம் கார்டுகளை டேட்டாவிற்காகப் பயன்படுத்த முடியாது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது ஜியோ. 6,500 ரூபாய் விலைக்கு ஏற்ற போனாக இது இருக்குமா என்பதைப் பயன்படுத்திப் பார்க்கும்போதுதான் தெரியும்.
from Latest News https://ift.tt/3BtM8ni
0 Comments