பண்டிகை நாள்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது. ராமு டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து நிறுவனம் அதிக கட்டணம் வசூல் செய்கிறது என்று நேற்று (29.10.2021) விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் எதிரொலியாக அந்த பேருந்தைச் சோதனை செய்த அதிகாரிகள், அதிக கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்து அந்த பேருந்தைச் சிறை பிடித்திருக்கின்றார்கள்.
இது தொடர்பாகச் சென்னை வடக்கு சரகம் இணைப் போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக வந்துள்ள புகாரின் அடிப்படையில் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், TN20CR0973 என்ற வாகனத்தைச் சோதனை செய்தபோது, இந்த வாகனத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் ஆய்வுக்கு இல்லாததினால், அந்த வாகனம் சிறைபிடிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: கட்டணக் கொள்ளை: `அதிக கட்டணம் கொடுங்கள்!' டிக்கெட்டை ரத்து செய்த ஆம்னி பேருந்து நிறுவனம்
மேலும், ``இது போன்ற திடீர் வாகன சோதனைகள், சிறப்பு வாகன தணிக்கை குழுவினர் மூலம் வரும் 10.11.2021-ம் தேதி வரை நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும். வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் வசூலிக்கும் மற்றும் உரியச் சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறை பிடிக்கப்படும். எனவே ஆம்னி பேருந்துகள் எப்பொழுதும் வசூலிக்கும் கட்டணத்தை மட்டும் வசூலிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது " என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு வெளியூர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பைத் தரும்படியும். இதுபோன்ற அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், பொதுமக்கள் 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிற்குப் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
from Latest News https://ift.tt/3Ewv8yN
0 Comments