சசிகலாவை முன்வைத்து அதிமுகவில் நிலவும் மோதல், தஞ்சாவூரில் தங்கியிருந்தபடி சசிகலா செய்து வரும் சுற்றுப்பயணம் போன்ற பரபரப்புகளால் தகித்துக்கிடக்கிறது அதிமுக வட்டாரம். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சசிகலா தம்பி திவகாரனால் நடத்தப்படும் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட திவாகரன், ``பெண்கள் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்துவதில்லை" எனப் பேசியிருக்கிறார். சசிகலாவை மனதில் வைத்தே இப்படிப் பேசியதாகப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 60 -வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் கலை இலக்கியப் பெருமன்றத்தினர் அதன் வைர விழாவைக் கொண்டாடி வருகின்றனர். தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பகத்சிங் பிறந்த நாளையொட்டி "விடுதலைப் போரில் பகத்சிங்" தந்தைப் பெரியார் பிறந்த தினத்தில் "அன்புள்ள எம் தந்தையே!" என்ற தலைப்புகளில் கடிதம் எழுதும் போட்டியை நடத்தினர்.
இதில் பகத்சிங்,பெரியார் குறித்து சிறப்பாக எழுதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கே சென்று பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டு விழாவினை நடத்தி வருகின்றனர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர். சசிகலாவின் தம்பி திவாகரன் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியினை நடத்தி வருகிறார். அக்கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர் நடத்திய போட்டியில் கலந்துகொண்டனர். இதில் மாநில அளவில் சிறப்பாக எழுதி வென்ற இரண்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் நடைப்பெற்றது.
கல்லூரியின் தாளாளரான முனைவர்.திவாகரன் தலைமையில் விழா நடைபெற்றது. இலக்கியப் பெரு மன்றத்தின் பொதுச் செயலாளர் முனைவர்.இரா.காமராசு, தங்கபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முனைவர்.இரா.காமராசு பேசியதாவது, "நவீன தொழில் நுட்பங்களில் தமிழரின் பாரம்பரிய இலக்கிய வடிவங்களில் ஒன்றான கடிதம் எழுதும் இலக்கிய வகைமை அருகியும், தொலைந்தும் வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
கலை இலக்கியப் பெரு மன்றம் வைர விழா ஆண்டின் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக தமிழின் பாரம்பரிய கலாசாரங்களை மீட்டெடுப்பதை ஒரு முக்கிய கடமையாக கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களுக்கு பரிசும் சான்றுகளும் வழங்கி வருகிறது. இளம் தலைமுறையினரான பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழின் பாரம்பரிய கலாசாரங்களை மீட்டெடுக்கப் பாடுபட வேண்டும்!"என்றார்.
இதையடுத்து பேசிய திவாகரன், ``எங்கள் கல்லூரியில் படித்த பல பெண்கள் இன்றைக்கு உயர் பதவிகள் வகித்து வருகின்றனர். பெண்களுக்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக கல்லூரியில் நடத்தபடும் கேம்பஸ் இன்டர்வியூவில் பல பெண்கள் செலக்ட் ஆகி வேலை கிடைக்கிறது. தூரம் போன்றவற்றை காரணம் காட்டிப் பெண்கள் அந்த வேலையில் சேர்வதைத் தவிர்த்து விடுகின்றனர். கிடைத்த வாய்ப்புகளைப் பெண்கள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் சிறகுகளை அகல விரித்து பறக்க வேண்டும்" என்றார். சசிகலா கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதை மனதில் வைத்தே திவாகரன் சூசகமாகச் சொல்கிறார் எனக் கூட்டத்தல் கிசுகிசுக்கத் தெடங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு பரிசுகளைத் திவாகரன் வழங்கினார். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நான் முழுக்க புத்தக வாசிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். கம்பராமாயனம், மகாபாரதம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற இலக்கிய நூல்களை படித்து முடித்திருக்கிறேன். இவற்றை படிக்கும்போதே தமிழ் மொழி மிகவும் பரந்து விரிந்த மொழி என்பதை அறிய முடிகிறது. ஒரு மொழி கற்காமல் பல மொழிகள் கற்றால்தான் தமிழில் தொன்மை, புகழ் ஆகியவை தெரியும் என திவாகரன் தெரிவித்தார்.
Also Read: தினகரன் மகள் திருமணம்: கலந்துகொள்ளாத திவாகரன்; மெளனம் காத்த சசிகலா!
சசிகலாவை முன் வைத்து அதிமுகவில் நிலவும் மோதல்,தஞ்சாவூரில் தங்கியிருந்தபடி சசிகலா செய்து வரும் சுற்றுப்பயணம் போன்ற பரபரப்பான சூழலுக்கிடையே தனது கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட திவாகரன் அரசியல் குறித்து பேசுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதிமுகவில் நடக்கும் மோதல்கள்,சசிகலா சுற்றுப்பயணம் போன்றவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாக திவகாரன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.சசிகலா தஞ்சாவூரில் தங்கியிருக்கும் நிலையில் திவாகரன் இதுவரை அவரை சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
from Latest News https://ift.tt/2ZKjJwz
0 Comments