https://gumlet.assettype.com/vikatan/2021-08/511dec77-a3d9-4333-8a46-a93467635735/IMG_20210818_WA0005.jpgநேருவுக்காகத் தவிக்கும் ஸ்டாலின் முதல் அதிமுக-வினருக்குப் பூங்குன்றன் அட்வைஸ் வரை கழுகார் அப்டேட்ஸ்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முதற்கட்டமாக டிசம்பர் இறுதியிலும், இரண்டாம் கட்டமாக ஜனவரி முதல் வாரத்திலும் நடத்தலாமா என்று பரிசீலித்துவருகிறது மாநிலத் தேர்தல் ஆணையம். இதையடுத்து கோவையில் தி.மு.க., அ.தி.மு.க என இரு பக்கமும் மேயர் பதவியைப் பிடிக்க போட்டா போட்டி தொடங்கிவிட்டது. இங்கு மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர்களில் இருவர் தங்கள் குடும்பப் பெண்களுக்கு சீட் வாங்குவதற்காகத் தீவிரமாக முயன்றுவருகிறார்கள்.

கோவை

அ.தி.மு.க-விலோ கோவை தனது கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்கத் துடிக்கும் மாஜி அமைச்சர் தரப்பு, வார்டுக்கு 60 சிறிய ஸ்வீட் பாக்ஸ்களை இறக்கத் திட்டமிட்டிருக்கிறது. இரண்டெழுத்து நடிகையின் பெயர்கொண்ட தி.மு.க மகளிரணி நிர்வாகி ஒருவரோ, வார்டுக்கு 50 சிறிய ஸ்வீட் பாக்ஸ்களை இறக்கத் தயாராக இருக்கிறாராம். இவர்கள் இப்படியென்றால், சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்த மையப்புள்ளியோ, வார்டு ஒன்றுக்கு தலா ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸையே இறக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பதால், அரண்டுபோயிருக்கிறார்கள் இதர தி.மு.க நிர்வாகிகள்!

கோவையில் இப்படியென்றால், திருச்சி மாவட்ட தி.மு.க-விலோ இரண்டு அமைச்சர்கள் தரப்புமே தங்களின் ஆதரவாளர்களுக்காக மேயர் பதவி கேட்டு மல்லுக்கட்டுகின்றன. இதையடுத்து, `மேயர் பதவியைப் பிடிக்கப்போவது நேருவின் ஆதரவாளர்களா... அல்லது அன்பில் மகேஷின் ஆதரவாளர்களா?’ என்று காரசாரமாகப் பட்டிமன்றமே நடத்துகிறார்கள் உடன்பிறப்புகள்.

நேரு - அன்பில் மகேஷ்

அன்பில் ஆதரவாளரான மலைக்கோட்டைப் பகுதிச் செயலாளர் மதிவாணன், நேருவின் ஆதரவாளரான நகரச் செயலாளர் அன்பழகன், நேருவின் மகன் அருண் நேரு உள்ளிட்டோர் மேயர் பதவிக்காகக் காய்நகர்த்தத் தொடங்கிவிட்டார்கள். பனிப்போரில் இருக்கும் அமைச்சர்கள் இருவருக்குமே இது கெளரவப் பிரச்னை என்பதால், அவர்களும் இப்போதே தலைமையை நெருக்கத் தொடங்கிவிட்டார்கள். நேருவுக்கு தன் மனதில் நிறைய இடம் இருந்தாலும், உதயநிதிக்கு அன்பில் நெருக்கம் என்பதால் யார் பக்கம் சாய்வது என்று தவிக்கிறாராம் ஸ்டாலின்!

ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த பூங்குன்றன், தற்போது அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், `குடும்பம் அழிவதை வேடிக்கை பார்க்காதீர்கள். இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கும் காரியத்துக்கும், யானை தன்மீது மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை. நீங்கள் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தால், அது புதியவர்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்துவிடும்’ என்று எச்சரித்திருக்கிறார். இதில் அவர், `புதியவர்கள்’ என்று சொல்வது பா.ஜ.க-வைத்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பூங்குன்றன் ஜெயலலிதா

அதுமட்டுமல்லாமல், ``குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது புதியவர்கள் கைகளுக்குப் போகாமல், தக்கவைத்துக்கொள்ளுங்கள்’’ என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருக்கு போன் போட்டும் சொல்லியிருக்கிறாராம் பூங்குன்றன். இதையடுத்து, `கட்சிமீது அவருக்கு இருக்கும் அக்கறைகூட கட்சியின் தலைவர்களுக்கு இல்லையே...’ என்று புலம்புகிறார்கள் கீழ்மட்ட நிர்வாகிகள்!

பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த அமுதா ஐ.ஏ.எஸ்., சில தினங்களுக்கு முன்பாக தமிழகப் பணிக்காக அழைக்கப்பட்டார். ஆனால், இதுவரை அவருக்கு எந்தத் துறையும் ஒதுக்கப்படவில்லை. இதன் பின்னணியை விசாரித்தால், அவருக்கு முக்கியமான துறையை ஒதுக்க நினைத்தாராம் முதல்வர்.

அமுதா ஐ.ஏ.எஸ்

ஆனால், அமுதாவை உள்ளேவிட்டால் நமக்குச் சிக்கல் ஏற்படும் எனக் கருதிய ஐ.ஏ.எஸ் டீம் ஒன்று லாபி செய்து, முதல்வரைக் குழப்பிவிட்டிருக்கிறதாம். `இதனாலேயே, அமுதாவுக்குத் துறை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

தமிழக அமைச்சர்களுக்குள் ஈகோ மோதல் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. குறிப்பாக, இரண்டாம் இடத்திலுள்ள மூத்த அமைச்சர், தனக்குப் `பொதுவான’ துறையை ஒதுக்கவில்லை என்கிற வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், பழைய பாசத்தில் அவரிடம் ஒப்பந்தாரர்கள் சிலர் வேலை கேட்டு வர, ``சீக்கிரமே அவர்கிட்ட இருக்குற ரெண்டு துறைகள்ல ஒண்ணு நம்ம கைக்கு வந்துடும்யா... அப்புறம் பார்த்துக்கலாம், கவலையேபடாதீங்க’’ என்று அனுப்பிவைக்கிறாராம். இதை அறிந்த இனிஷியல் அமைச்சர் இது பற்றி முதல்வரிடமே புலம்பியிருக்கிறார்.

Also Read: மிஸ்டர் கழுகு: சசிகலா தொடர்ந்த வழக்கு... வாய்தா வாங்கிய பன்னீர்... அதிர்ச்சியில் எடப்பாடி!

ஆனால், இனிஷியல் அமைச்சரின் நடவடிக்கைகள் பற்றி இதர அமைச்சர்கள் பலரும், ``எங்க மாவட்டத்துல நடக்குற எந்த வேலையையும் நாங்க கைகாட்டுற கட்சிக்காரங்களுக்கு ஒதுக்காம அவருக்கு வேண்டப்பட்டவங்களுக்கே கொடுத்துடுறாரு!’’ என்று முதல்வரிடம் புலம்பியிருப்பதால், இனிஷியல் அமைச்சருக்கு ஆறுதலாக எந்த ரியாக்‌ஷனையும் காட்டவில்லையாம் முதல்வர் தரப்பு!

சென்னை போலீஸ் ஆணையரகத்தை சென்னை, ஆவடி, தாம்பரம் என மூன்றாகப் பிரித்த பிறகு ஆவடிக்கும் தாம்பரத்துக்கும் தற்காலிகமாக அலுவலக இடம் கிடைத்துவிட்டது. ஆனாலும், தாம்பரம் ஆணையர் அலுவலகத்துக்குத் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தவிர, காவல் எல்லைகளும் இன்னும் முழுமையாகப் பிரிக்கப்படாமல் இருப்பதால், எந்த வேலையும் இல்லாமல் அலுவலக விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருக்கிறாராம் புதிய கமிஷனர் எம்.ரவி.

காவல்துறை

`எத்தனை நாள்களுக்குத்தான் இப்படிச் சும்மாவே இருப்பது?’ என்று நினைத்தவர், தலைமைக்கு போன் போட்டு ``எனக்கு என்ன வேலை?’’ என்று கேட்டபோது, ``எப்படியும் வேலையெல்லாம் முடிக்க மூணு மாசமாகும்... அதுவரைக்கும் ரிலாக்ஸா இருங்க!’’ என்று பதில் வரவே... ``எனக்கு சர்வீஸே இன்னும் ஆறு மாசம்தான் இருக்கு. அதுல மூணு மாசத்தைவெச்சுக்கிட்டு என்ன செய்ய?’’ என்று புலம்பித் தள்ளிவிட்டாராம் புதிய ஆணையர்!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சித் தலைவர் பதவிக்கு ஆளுங்கட்சியில் மூன்றெழுத்து வர்த்தகர் பிரமுகர் குறிவைத்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் தனக்கு உபயம் செய்ததற்கு நன்றிக்கடனாக அமைச்சரே அவருக்கு சீட் வாங்கித் தருவதாக உறுதி கொடுத்திருக்கிறாராம். ஆனால், வர்த்தகர் பிரமுகர் மீதான அதிருப்தியில் அந்தப் பகுதியின் இதர நிர்வாகிகளோ, ``அவருக்கு சீட் கொடுத்தால் நாங்களே அவரைத் தோற்கடிப்போம்’’ என்று அமைச்சரிடமே எகிறியிருக்கிறார்கள்.

Also Read: மிஸ்டர் கழுகு: “கட்சி ஆரம்பிக்கலாங்ணா...” - விஜய்யை உசுப்பேற்றும் ரசிகர்கள்!

அமைச்சரோ அதையெல்லாம் கண்டுகொள்ளாததை அடுத்து, அந்த வர்த்தகர் பிரமுகர் இதற்கு முன்பு, இதே நகராட்சியில் துணைத் தலைவராக இருந்தபோது கொடுத்த விவகாரமான சான்றிதழ் விஷயத்தைக் கையிலெடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்!



from Latest News https://ift.tt/3CvrYdT

Post a Comment

0 Comments