பிக் பாஸ் தமிழ் 5வது சீசனின் மூன்றாவது எவிக்ஷனில், இந்த வாரம் வெளியேறியுள்ளார் நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணு.
பிக் பாஸ் தொடங்கி ஒரு மாதம் முடியப் போகிற நிலையில் 5வது சீசன் இப்போதுதான் விறுவிறுப்படையத் தொடங்கி இருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதன் முதலில் திருநங்கை நமீதா மாரிமுத்து வெளியேறினார். நமீதா வெளியேறியதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர், தன்னை மீண்டும் நிகழ்ச்சிக்குள் அனுப்பிவைக்கும்படி சேனலில் கேட்டதாகவும், ஆனால் சேனல் தரப்பிலிருந்து பாசிட்டிவான பதில் கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
நமீதாவை வெளியேறியதற்குப் பிறகு நடந்த முதல் எவிக்ஷனில் வெளியேறினார், மலேஷியாவைச் சேர்ந்த நாடியா சாங். நிகழ்ச்சியில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்ததாலேயே இவர் வெளியேற்றப்பட்டதாகச் சொன்னார்கள்.
கடந்த வாரம் இந்த சீசனின் இரண்டாவது எவிக்ஷனிலோ பெரிய அதிரடி அரங்கேறியது. 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' எனக் கமல் சொல்வாரே, அதை உண்மையாக்கி, நிகழ்ச்சியில் நல்ல கன்டென்ட் கொடுத்துக் கொண்டிருந்த அபிஷேக்கை வெளியேற்றினார்கள். அபிஷேக் மீது வெளியில் நெகட்டிவிட்டி இருந்தாலும், அவர் மூலம் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கிடைத்து வந்ததால், அவரை அனுப்ப மாட்டார்கள் என்றே பலரும் நினைத்திருந்தனர். ஆனால், அது பொய்யானது.
இந்த வாரம் மூன்றாவது எவிக்ஷன். கமல் கலந்து கொண்ட இதற்கான ஷூட்டிங் இன்று (30/10/21) காலை தொடங்கியது. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் அக்ஷரா, ப்ரியங்கா, இமான் அண்ணாச்சி, பாவனி, வருண், ஸ்ருதி, இசைவாணி, சின்னப்பொண்ணு, அபிநய் ஆகிய ஒன்பது பேர் இருந்தனர். இவர்களில் நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணு எலிமினேட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.
சின்னப்பொண்ணுவைப் பொறுத்தவரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதலே சொல்லிக் கொள்ளும்படி எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்பதே வெளியில் இருப்பவர்களின் கருத்தாக உள்ளது. ஏன் அப்படி இருந்தார் என்கிற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
'சும்மா'வே இருந்ததால் முதல் எவிக்ஷனிலேயே வெளியேறுவார் என எதிர்பார்ப்பை உண்டாக்கினார். கடந்த வாரமும் அபிஷேக்குடன் கடைசியாக இவர் மட்டுமே இருந்ததால் இவர்தான் வெளியேற்றப்படுவார் என நினைத்தார்கள். ஆனால் எப்படியோ அப்போதெல்லாம் தப்பித்துவிட்டவர், இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.
சின்னப்பொண்ணு வெளியேறிய எபிசோடு நாளை 31/10/21 ஒளிபரப்பாக இருக்கிறது.
from Latest News https://ift.tt/3w1K5Gg
0 Comments