https://gumlet.assettype.com/vikatan/2021-08/6e4e34b3-b9d6-47e6-a9bd-f4ea5af7f18a/WhatsApp_Image_2021_08_18_at_5_23_17_PM.jpeg`வெல்க தளபதி.. வெல்க உதயநிதி’ -நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமாரின் கோஷமும் திமுக, அதிமுக ரியாக்‌ஷனும்

நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி-க்களாக எம்.எம்.அப்துல்லா, என்.வி.என்.சோமு கனிமொழி மற்றும் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வாகினார்கள். நவம்பர் 29-ம் தேதியான நேற்று நாடாளுமன்றம் கூடியபோது மூவரும் எம்.பி-க்களாக முறைப்படிப் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது ராஜேஷ்குமார் தனது உரையை முடிக்கும்போது ‘வெல்க தளபதி.. வெல்க உதயநிதி’ என முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டார். இதனை கவனித்த வெங்கைய நாயுடு, `இதெல்லாம் அவைக்குறிப்பில் ஏறாது’ என்று கடிந்துகொண்டார். மேலும், ராஜேஷ்குமாரின் இச்செயலை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

உதயநிதி - ஸ்டாலின்

இதுகுறித்து தி.மு.க தரப்பில் பேசியபோது, “வாழ்க கோஷம் போடுவது குற்றமா? ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஏதாவதொரு பிரச்னை காரணமாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கோஷம் போட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு வெளியில் கூட அவ்வப்போது மத்திய அரசைக் கண்டித்து கோஷம் போடுகிறார்கள். தங்களது தலைவர் புகழை நாடாளுமன்றத்தில் ஒலிக்க விட வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜேஷ்குமார் பேசினார். பா.ஜ.க எம்.பி-க்கள் பலர் பதவியேற்கும்போது ‘பாரத் மாதாக்கி ஜே’ போன்ற வாசகங்களைச் சொல்கிறார்களே. அதெல்லாம் அவைக்குறிப்பியில் பதிவாகும்போது, தளபதி, உதயநிதி பெயர் மட்டும் பதிவாகக்கூடாதா?” என்கின்றனர்.

`தி.மு.க எம்.பி-யின் இச்செயலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் கேட்டோம். “சட்டமன்றம், நாடாளுமன்றம் எதுவானாலும் மரபுப்படி ஒரே விதிமுறைப்படிதான் பதவியேற்பு நடக்கும். மனசாட்சிப்படி, கடவுள் அறிய என்று சொல்லித்தான் பதவியேற்பார்கள். கம்யூனிஸ்டுகள் மனசாட்சிப்படி என்பார்கள், அ.தி.மு.க எம்.பி-க்கள் கடவுள் அறிய என்பார்கள், தி.மு.க சீனியர்கள் கூட உளமாற என்றுதான் பதவியேற்பார்கள். பாரம்பரிய அரசியல் நாகரிகம், பண்பாடு தெரிந்தவர்கள் அப்படித்தான் பதவியேற்பார்கள்.

கோவை செல்வராஜ்

ஆனால், ராஜேஷ்குமாருக்கு நாடாளுமன்றமும் தெரியாது, மரபும் தெரியாது. ஏதோ கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல ஸ்டாலினையும், உதயநிதியையும் பாராட்டிப் பேசுகிறார். அதனை சபாநாயகர் வெங்கைய நாயுடு அவைக்குறிப்பில் ஏறாது என்று சொல்லிவிட்டார். இதைப்பார்க்கும்போது வேடிக்கையாகத்தான் உள்ளது. இனியாவது தி.மு.க வழிமுறைகளை, பண்பாட்டைச் சொல்லிக்கொடுத்து பாடம் எடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இல்லையெனில் இதுபோல தமிழகத்துக்கு தொடர்ந்து அவப்பெயர் தான் கிடைக்கும். பா.ஜ.க-வினர் பாரத் மாதாக்கி ஜே என்று சொல்வது பொதுவான வார்த்தை. அது யாரையும் குறிப்பிடவில்லை. மோடிக்கு ஜே, அமித் ஷாவுக்கு ஜே என்றெல்லாம் அவர்கள் சொல்வதில்லை. எந்த ஒரு கட்சியுமே நாடாளுமன்றத்தில் தனி மனித துதிப் பாடுவது கிடையாது” என்றார்.

Also Read: அமாவாசை டு நாகராஜ சோழன் - திமுக எம்.பி நாமக்கல் ராஜேஷ்

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பாளர் பி.டி.அரசகுமார் நம்மிடம் பேசுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது இந்திய அளவில் பேசப்படும் வாய்ப்பைக் கொடுக்கும் பதவி. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பதவியைத் தனக்கு ஒதுக்கிய தலைவர்களை புகழ்வதில் என்ன தவறு இருக்கிறது? தளபதியால் கொடுக்கப்பட்ட பதவிதானே அது. தளபதிக்கு அடுத்த இடத்தில் உதயநிதி தானே இருக்கிறார்,

பி.டி. அரசகுமார்

அதனால் அவரையும் சேர்த்து புகழ்கிறார். மத்திய பா.ஜ.க அமைச்சர்கள் கூட நாடாளுமன்றத்தில் ஏதாவது திட்டம் குறித்துப் பேசும்போது முதலில் மோடியைப் பாராட்டிவிட்டுத்தானே பேசத் தொடங்குகிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் இந்திரா, ராஜீவ் காந்தி, சோனியா, ராகுல் வரை புகழ்கிறார்கள். பதவி கொடுத்தவருக்கு நன்றிக் கடனைச் செலுத்தும் உணர்வுதான் அப்பேச்சு. தினம் தினம் பெயரைச் சொல்லப்போவதில்லை, முதல் நாள் என்பதாலும், பதவியேற்பு வைபவம் என்பதாலுமே அப்படிப் பேசினார் ராஜேஷ்குமார். இது ஒன்றும் திட்டமிட்டு செய்ததில்லை, தானாக அவ்விடத்தில் மனதில் பட்டதைப் பேசிவிட்டார். அவைக்குறிப்பில் அது இடம் பெறாது என்பது ராஜேஷ்குமாருக்கும் தெரியும், இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் அவர் பேசவில்லை” என்றார்.



from Latest News https://ift.tt/3lnXMee

Post a Comment

0 Comments