https://gumlet.assettype.com/vikatan/2021-11/dcda1e97-c643-4d81-b04d-7fcfeff37625/Screenshot_20211130_132246.jpgகைதிகள் முன் விடுதலைக்கான அரசாணை: இஸ்லாமியர்களை புறக்கணிக்கிறதா தமிழக அரசு..?

``அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறையிலிருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள்" எனத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதையொட்டி தற்போது 700 பேரை விடுதலை செய்வதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. இதில், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், மத மோதல், சாதி மோதல், அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதை ஆய்வு செய்யவும், இறுதி பட்டியலைத் தயாரிக்கவும் சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் அரசாணை

தமிழ்நாடு அரசாணையில் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

Also Read: மேலவளவு, தர்மபுரி வழக்குகள்... பாரபட்சமான முன்விடுதலை- நீதிமன்றத்தில் குவியும் கோரிக்கை மனுக்கள்!

இது தொடர்பாகத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தற்போது வெளியிடப்பட்ட அரசாணைகளில் வாழ்நாள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத/மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில், வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் காட்டப்பட்ட பாரபட்சங்கள் போல இல்லாமல் இந்த அரசு கருணையுடன் விடுதலை செய்யும் என்று நம்பியிருந்த வாழ்நாள் சிறைவாசிகள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மொத்த சமூகத்திற்கும் இந்த அரசாணை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும், விரக்தியையும் அளித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம் அனுபவித்து முதுகலைப் பட்டங்கள் வரை பெற்று சீரிய முறையில் சீர்திருத்தம் பெற்றிருக்கும் நிலையில் விடுதலைச் செய்யப்படும் முஸ்லிம் சிறைவாசிகள் இனி எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்கின்றேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் அரசின் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். முன் விடுதலை செய்யப்படுபவர்களில் இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் விதமாகத் தமிழக அரசின் அரசாணை இருக்கிறதா என்ற விசாரணையில் இறங்கினோம்...

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் ராஜீவ் காந்தியிடம் இந்தச் சர்ச்சை குறித்துப் பேசினோம். ``பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாள்களாகச் சிறையிலிருப்பவர்களை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அதற்கான அரசாணை பிறப்பித்திருக்கிறது. சிறைவாசிகள் நலன் குறித்து மாநில அரசு தனக்குரிய அதிகாரத்துக்குட்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. முத்தமிழறிஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், இதேபோல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதைப் பின்பற்றி தற்போது இருக்கும் தி.மு.க அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'பல்வேறு வழக்குகளில் நீண்டநாள் சிறையிலிருக்கும், குறிப்பாகக் கோவை கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும். ஆனால், அரசாணை அதற்கு எதிராக இருக்கிறது. எனவே அதை நீக்க வேண்டும்’ என இஸ்லாமியச் சகோதரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர் ராஜீவ்காந்தி - தி.மு.க

சிறைவாசிகள் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஒரு தீர்ப்பில், `நீண்ட நாள்களாகச் சிறையிலிருக்கும் கைதிகள் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்படும்போது, மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், குறிப்பிட்ட சில வழக்குகளில் இருப்பவர்களை விடுதலை செய்யக்கூடாது’ என அறிவுரை வழங்கியிருக்கிறது. அதனடிப்படையில் தான் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``ஒட்டுமொத்தமாக நன்னடத்தையின் அடிப்படையில் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்யும்போது நிச்சயம் சாதி, மத அடிப்படையில் அது நடக்காது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு அதற்கு இடமும் கொடுக்காது. இஸ்லாமியச் சகோதரர்களின் அச்சம் தேவையற்றது. அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து தி.மு.க அரசு உரியதைச் செய்யும். இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தேவையில்லாத அச்சம்" என அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

ஹாஜா கணி - தமுமுக பொதுச்செயலாளர்

தமிழ்நாடு அரசின் அரசாணை குறித்து எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனியிடம் பேசினோம். ``அரசாணையில் இருக்கும் சில விஷயங்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டவர் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என உறுதியளித்தார். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என எதிர்பார்க்கிறோம்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.



from Latest News https://ift.tt/3pcbhz1

Post a Comment

0 Comments