https://gumlet.assettype.com/vikatan/2021-01/9ebc4bfc-f6ed-4632-a4d6-e45313c27039/WhatsApp_Image_2021_01_30_at_4_59_48_PM.jpegதேமுதிக: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி! - காரணம் என்ன?

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். கடந்த மாதம் நடந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான இடங்களைக்கூட கைப்பற்ற முடியாத நிலையில், தே.மு.தி.க தலைமையின் இந்தமுடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அ.ம.மு.க கூட்டணியில் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக நோட்டாவுக்கும் கீழாக வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியில் ஒரேயொரு ஒன்றியக் கவுன்சிலர் இடத்தை மட்டுமே கைப்பற்றியது.

தே.மு.தி.க ஆலோசனை கூட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தனித்துக் களம் கண்டது தே.மு.தி.க. இந்த நிலையில், வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டி என தற்போது அறிவித்திருக்கிறது.தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், ``தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும். தே.மு.தி.க சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க-வின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க-வின் நிர்வாகியாக இருப்பவர்களும், தே.மு.தி.க-வின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர் தோல்வியையும், நிர்வாகிகள் விலகலையும் சந்தித்துவரும் தே.மு.தி.க மீண்டும் தனித்துப் போட்டியிடக் காரணம் என்ன? என்ற கேள்வியை முன்வைத்து அந்த கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

Also Read: களத்துக்கு வந்த புரட்சி நாயகன்... நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த கதை!

``கட்சி ஆரம்பித்து 2011 தேர்தலில் கூட்டணி வைக்கும் வரைக்கும் எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கும், எங்களின்மீது மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் இருந்தது. தொடர்ந்து. அ.தி.மு.க, பா.ஜ.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் மக்களிடையே எங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும்கூட அது மிகப்பெரிய சோர்வைக் கொடுத்திருக்கிறது. மாறி மாறி கூட்டணி வைக்கிறோம் என்கிற விமர்சனத்தைத் தவிர்ப்பதற்காகத்தான், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். பெரியளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் தொண்டர்கள் மத்தியில் அது ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. இந்த நேரத்தில் மீண்டும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து தொண்டர்களின் உற்சாகத்தை ஏன் குலைக்க வேண்டும். அதனால்தான் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனித்துக் களமிறங்க முடிவு செய்திருக்கிறோம்.

தே.மு.தி.க விஜய பிரபாகரன்

லோக்கலில் செல்வாக்குமிக்க எங்கள் கட்சித் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகுந்த ஆர்வமாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் விருப்பமனுக்கள் பெறப்பட்டபிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தவிருக்கிறோம். அவர்களின் கருத்துகளைக் கேட்டு தேர்தல் வியூகங்கள் அமைக்கப்படும். எவ்வளவு பேர் போட்டியிட விருப்பமனு அளிக்கிறார்கள், என்பதைப் பார்த்தபிறகுதான் அண்ணியார், விஜயபிரபாகரன் தேர்தல் பிரசாரத்துக்கு வருவது குறித்து முடிவெடுக்கப்படும். ஆனால், கடந்த தேர்தல்களைப்போல் இல்லாமல், கண்டிப்பாக இந்தத் தேர்தலில் கணிசமான வெற்றியை நாங்கள் பெறுவோம். மக்கள் மத்தியில் நாங்கள்தான் உண்மையான மாற்று என்கிற நம்பிக்கையை மீண்டும் விதைப்போம்'' என்கிறார்கள் மிக உறுதியாக.



from Latest News https://ift.tt/31fL0XX

Post a Comment

0 Comments