https://gumlet.assettype.com/vikatan/2021-11/7f817146-03b3-4e04-a227-bcd31f506baa/02ea7e29_b8cc_4e76_88a3_60e9acfff5b5.jfifதிருப்பத்தூர்: வெள்ளப்பெருக்கால் உடைந்து போன தடுப்பணை; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருவதால், திருப்பத்தூர் மாவட்டம் காக்ணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இராஜபாளையம் கிராமத்தில் ஆற்றில் தடுப்பணை உடைந்து விட்டது.

அதனால், சுற்றுவட்டார கிராமங்களான கொடும்மாம்பள்ளி, புதுப்பாளையம் பகுதிகளில் மக்கள் ஏரியைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கிராமங்களில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்குக் கூட சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்று, ஏரியைக் கடக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

உடைந்த தடுப்பணை

மேலும், பள்ளிகள் திறந்து 3 மாதங்களாகியும் சரியான சாலை வசதி இல்லாததால், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். அப்படியே பள்ளிக்குச் சென்றாலும் சரியான நேரத்துக்குச் செல்ல முடியவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

ஏரியைக் கடந்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மிகவும் பயமாக இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பெரிதாகப் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கிராம மக்கள், ``நாங்கள் வேலைகளுக்குச் சென்று சுமார் 20 நாள்கள் ஆகின்றன. பேருந்து வசதி இல்லாததால் வேலைக்குச் சென்று வருவதற்குக் கூட முடியவில்லை. இங்கு எல்லோரும் விவசாயத்தை நம்பியே இருக்கிறோம். ஆனால், அறுவடை செய்த காய்கறிகளை, உரியக் காலத்தில் சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் கறவை மாடுகளிடமிருந்து தினமும் கறக்கப்படும் பாலையும் விற்க முடியவில்லை.

கிராம மக்கள்

கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் செல்ல சாலை இல்லாததால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட எங்கள் கிராமங்களுக்கு வருவதில்லை. ரேஷன் கடைக்குக் கூட செல்லக் கூட வழி இல்லை. இப்படியான சூழலில், இந்த பருவமழையால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அரசு அதிகாரிகள் யாரும் எங்களை நேரில் வந்து இதுவரையிலும் பார்க்கவில்லை.

எனவே, உயர் அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். உடைந்த தடுப்பணையைச் சரி செய்து, ஏரிக்குச் செல்லும் சாலையைக் கடக்க ஒரு மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும்" என்றனர் ஆதங்கத்துடன்.

வி.தருண்,

(மாணவப் பத்திரிகையாளர்)

Also Read: ஊழலில் உடையும் தடுப்பணை! - அமைதி காக்கும் தி.மு.க... கொந்தளிக்கும் விவசாயிகள்...



from Latest News https://ift.tt/3o5VBxV

Post a Comment

0 Comments