கன்னியாகுமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாகி உள்ளது.

Also Read: 50 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய மதுரை மாடக்குளம் கண்மாய்; குத்துக்கல் விழா நடத்திய விவசாயிகள்!
இந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 32,000 கனஅடி நீர் திறந்து தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டுள்ளது. இந்த நீர், தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டிச் செல்கிறது. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் மரங்கள், கட்டைகள், குப்பைகள் ஆகியவை மதகுகளில் சிக்கிவிடும் என்பதால், மணல்வாரி மதகுகளையும் பொதுப்பணித்துறையினர் திறந்துவிடவில்லை.
அதிகப்படியான தண்ணீரால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து, கடந்த 3 நாள்களாக முடங்கியுள்ளது. இந்த நிலையில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி, நீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றுப் பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பல இடங்களில் கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் வரவில்லை.

திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டாகவே பருவமழை பொய்த்துப் போனது. இதனால், வாழை, வெற்றிலை விவசாயத்தின் பரப்பளவு பாதியாகக் குறைந்துவிட்டது. தண்டுபத்து பகுதியில் இளைஞர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் பங்களிப்புடன் `ஊர்கூடி ஊரணி காப்போம்’ என்ற அமைப்பின் மூலம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவுள்ள நரிக்குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சடையநேரிகுளம் பகுதியில் இருந்து நரிக்குளத்திற்கு அமைக்கப்பட்டிருந்த நீர்வழித்தடங்களை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு நரிக்குளத்திற்கு தண்ணீர் வந்தது.

Also Read: நெல்லையில் பெய்த கனமழை: வெள்ள நீரால் சூழப்பட்ட கோழிப்பண்ணை! - உயிரிழந்த 5,500 கோழிகள்
இந்த தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். ``சரியாக மழை பெய்யாததால் பல பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் வந்து சேரவில்லை என்றாலும், ஆக்கிரமிப்புகளாலும், நீர் வழித்தடங்கள் தூர்ந்தும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும்” என்றனர் அப்பகுதி விவசாயிகள். 50 ஆண்டுகளுக்குப் பிறகு நரிக்குளத்திற்கு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
from Latest News https://ift.tt/3xAe7lb
0 Comments