நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஊட்டி, குந்தா, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஊட்டி, லவ்டேல், கோத்தகிரி என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் சாலைகளின் குறுக்கே மின் கம்பங்களின் மீதும் விழுந்திருக்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பல்வேறு மலைக் கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டிருக்கிறது. மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட துவங்கியிருக்கிறது. இதனால், அணைகளின் நீர்மட்டமும் மெள்ள உயரத் துவங்கியிருக்கிறது. பெரும்பாலான அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மாயாற்றில் குளிக்கச் சென்ற கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீலகிரியில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். அதேசமயம் பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு நடவடிக்கைகளிலும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீட்பு முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``ரெண்டு நாளாகவே மழை அதிகமா இருக்கு. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம். சில இடங்களில் மரங்கள் விழுகின்றன, உடனடியாக அகற்றி வருகிறோம். போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டு வருகிறது. அபாயமான நிலையில் இருக்கக்கூடிய கட்டடங்கள், மரங்கள் அடியில் நிற்கவோ வாகனங்களை நிறுத்தவோக் கூடாது என எச்சரித்து வருகிறோம். பேரிடர் அபாயம் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். எனவே, மக்கள் கவலைப்படதேவையில்லை" என்றார்.
from Latest News https://ift.tt/3rBnIY3
0 Comments