விழாவில் ஸ்டாலினுக்குக் கரிகாலச் சோழன் நினைவுப் பரிசு வழங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தஞ்சாவூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு `பொன்னியின் செல்வி' பட்டம் கொடுத்து சிலையும் பரிசாகக் கொடுத்ததை தற்போது நினைவு கூர்ந்து தஞ்சை வட்டார மக்கள் பேசிவருகிறார்கள்.

தஞ்சாவூரில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்காகப் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் நேரு, மகேஷ் பொய்யா மொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
விழாவில் முத்தாய்ப்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கரிகாலச் சோழன் சிலை நினைவுப் பரிசு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காகப் புவி சார் குறியீடு பெற்றிருக்கும் 'நெட்டி'யினை கொண்டு கரிகாலச் சோழன் நினைவுச் சின்னம் தயாராகிக் கொண்டிருக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2013-ல் முதலமைச்சராக இருந்தபோது, விவசாயிகள் சார்பில் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஜெயலலிதாவுக்கு 'பொன்னியில் செல்வி' பட்டமும், பொன்னியின் செல்வி சிலை ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நினைவுப் பரிசு வழங்க முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவரம் அறிந்தவர்கள், ``காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டதற்காக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் பிரமாண்ட பந்தல் அமைத்து, மாநாட்டைப் போல அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடத்தினர். அந்த விழாவில் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொன்னியின் செல்வி பட்டத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கியதுடன், பொன்னியின் செல்வி சிலையும் நினைவுப் பரிசாகக் கொடுத்தனர். ஜெயலலிதாவுக்குப் பொன்னியின் செல்வி பட்டம் கொடுக்கப்பட்டது அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற `மக்களைத் தேடி முதல்வர்' முகாமில் பொதுமக்களின் குறைகள் மனுக்களாகப் பெறப்பட்டன. உதவி கேட்டு சுமார் 50,000 மனுக்கள் வரை வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து நலத்திட்டம் வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட மனு கொடுத்தவர்களில் 50 சதவிகிதம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Also Read: ``இனி `மஞ்சப்பை' கிராமத்தானின் அடையாளம் அல்ல!" - விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஸ்டாலின்
இதுமட்டும் இன்றி இன்னும் பலருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். 30-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் விழா மதியம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. விழாவில் பிரமாண்ட கூட்டத்தைக் கூடுவதற்காக தி.மு.க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடைபெற்ற அதே கல்லூரியில் அதே இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டவராக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கிறார். இயற்கை விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாகக் காவிரி டெல்டா விவசாயிகள் குறைகளைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக விவசாயிகள் புகழாரம் சூட்டி வருகின்றனர். மாமன்னன் கரிகால சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விவசாயிகள் பயன் பெறும் வகையில் கல்லணை கட்டினார். அதன் வழியாகத் தண்ணீர் செல்வதனாலேயே தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்கள் உயிர்ப்புடனும், பசுமையுடனும் இருக்கின்றன.

விவசாயிகளுக்குப் பக்கபலமாக இருந்து அவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நெட்டியில் செய்யப்பட்ட கரிகால சோழன் சிலை நினைவுப் பரிசு வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. நினைவுப் பரிசு மட்டும் வழங்குகிறார்களா அல்லது கரிகால சோழன் பட்டம் கொடுக்கிறார்களா என்பது நிகழ்ச்சியில் தான் தெரியும்" என்றனர்.
Also Read: மம்தா Vs காங்கிரஸ்... தேசிய அரசியலில் யார் பக்கம் நிற்பார் ஸ்டாலின்?!
from Latest News https://ift.tt/315FIP8
0 Comments