https://gumlet.assettype.com/vikatan/2021-12/304096e6-199c-4775-8746-fec3bec1a9da/IMG_20211230_WA0105.jpgதுப்பாக்கி சுடும் பயிற்சி... சி.ஐ.எஸ்.எஃப் வீரர் சுட்ட தோட்டா பாய்ந்து சிறுவன் படுகாயம்!

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை, அம்மாசமுத்திரம் அருகே பசுமலைப்பட்டியில் துப்பாகி சுடும் பயிற்சி மையம் ஒன்று 1980 முதலே செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர்கள் சுமார் 25 பேர் வரை, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி வாங்கி கடந்த சில தினங்களாகவே பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில், டிச.30-ம் தேதி (இன்று) துப்பாக்கி சுடும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதற்கிடையே, பயிற்சியிலிருந்த வீரர் சுட்ட தோட்டா ஒன்று, அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த கலைச்செல்வன் என்பவரின் மகன் புகழேந்தி (11) தலையில் பாய்ந்ததில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உறவினர்கள் சாலைமறியல்

இதையடுத்து, சிறுவனை அவரின் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தொடர்ந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சுட்ட துப்பாக்கித் தோட்டா சிறுவன் தலையில் பாய்ந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சிறுவனின் உறவினர்கள் புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் கூறும்போது, ``இந்தப் பயிற்சி மையத்தைச் சுற்றிலும் அருகருகே 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. வீரர்களால் சுடப்படும் இந்தத் தோட்டாக்கள் சில கி.மீ தூரம் வரையிலும் பாயும் என்று கூறுகின்றனர். தன் வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் தலையில் தோட்டா பாய்ந்திருக்கிறது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியவில்லை. இந்தப் பயிற்சி மையத்தால் எங்க பகுதியிலுள்ள மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்துவருகின்றனர். இந்தப் பயிற்சி மையத்தை இங்கிருந்து மாற்ற, பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உடனே இந்தப் பயிற்சி மையத்தை இங்கிருந்த எடுக்க வேண்டும்" என்றார்.

இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``பயிற்சி மையத்தில் மிகுந்த கவனத்துடன்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே, அருகே உள்ள மலைக்கு மேலே பயிற்சி மைய எல்லைக்குள் வரக் கூடாது என்று எச்சரிக்கும்விதமாகச் சிவப்புக்கொடிகள் நடப்படுகின்றன. கிட்டத்தட்ட 50 அடி மலைகளைக் கடந்து வீட்டிலிருந்த சிறுவன் மீது குண்டு பாய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அந்தச் சிறுவன், துப்பாக்கிச்சூடு பயிற்சி மையப் பகுதி எல்லைக்குள்ளேயே இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், சிறுவன் பாதிக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது. இது குறித்து தொடர் விசாரணை நடத்திவருகிறோம்"என்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் செயல்படுவதற்கு தடைவிதித்து கலெக்டர் கவிதா ராமு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.



from Latest News https://ift.tt/3zakLPG

Post a Comment

0 Comments