கோவை மதுக்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிள்ளையார்புரம், சுகுணாபுரம், செந்தமிழ் நகர், ஆகிய பகுதிகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் இந்தப் பகுதிகளில் யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம்.

Also Read: கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை; 6 மணி நேரம் போராடி ஊஞ்சல் கட்டி மீட்ட வனத்துறையினர்!
அந்த வகையில், செந்தமிழ் நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று நடமாடிவருகிறது. மாலை நேரத்தில் மலைப்பகுதிகளில் ஓய்வெடுக்கும் சிறுத்தை, இரவில் குடியிருப்புப் பகுதிக்கு வருகிறது.
அப்படி வரும்போது, குடியிருப்புகளில் இருக்கும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடிச் செல்கிறது. அதனால், அந்தச் சிறுத்தையைப் பிடிப்பதற்காக அந்தப் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை சிறுத்தை சிக்கவில்லை. கடந்த மூன்று நாள்களில், அந்தச் சிறுத்தை மூன்று நாய்களை வேட்டையாடியிருக்கிறது.

அண்மையில், அந்தோணி என்பவரின் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, டாபர்மேன் ரக நாயை வேட்டையாட முயன்றிருக்கிறது.
அப்போது நாய் குறைத்ததைக் கேட்டு, அந்தோணி குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை ஓடிவிட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால், மேலும் இரண்டு பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்துக் கூறும் அந்தப் பகுதி மக்கள், ``இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாலை நேரங்களில் எங்கள் குழந்தைகள் விளையாடும். இருட்டிட்டா வெளிய வர பயமா இருக்கு... எனவே, வனத்துறை சீக்கிரமா சிறுத்தையைப் பிடிக்கணும்” என்று கோரிக்கை வைக்கின்றனர்.
from Latest News https://ift.tt/3eDzuJz
0 Comments