https://gumlet.assettype.com/vikatan/2021-12/b40865b4-d27a-43bc-b2ec-68256ebbcb67/IMG_20211230_WA0009.jpg`இல்லீகலா தானே சம்பாதிக்குற, ரூ.25 லட்சம் கொடு!' - லாட்டரி மாஃபியாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்

ஈரோடு கருங்கல்பாளையம், குயிலாந்தோப்பு மரப்பாலம் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சிவா (எ) சுப்பிரமணியம். இவரை சிவா என்றோ, சுப்பிரமணியம் என்றோ சொன்னால் கூட பலருக்கும் அடையாளம் தெரியாது. `எஸ்.வி.எல்.சிவா’ என்று இனிஷியலோடு சேர்த்து சொன்னால் ஈரோடு மாவட்டம் முழுக்கத் தெரியும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள லாட்டரி மாஃபியாக்களில் முக்கியமான நபர் இந்த எஸ்.வி.எல்.சிவா. லாட்டரி விற்பனை தொடர்பாக இவர் மீது போலீஸார் ஏராளமான வழக்குகளை பதிந்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். சிவா கடந்த 10 ஆண்டுகளாக ஈரோட்டில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வருகிறார். செல்வாக்குமிக்க நபராக வலம் வந்துகொண்டிருந்த சிவாவை, ஒரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு கடத்திச் சென்று பணம் பறித்து மிரட்டியிருப்பது தான் ஈரோட்டின் இன்றைய ஹாட் டாப்பிக் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்

என்ன நடந்தது?

தினமும் வீட்டிலிருந்து கிளம்பி ஈரோடு பேருந்து நிலையம் அருகிலிருக்கும் வ.உ.சி பூங்கா மைதானத்துக்கு வாக்கிங் செல்வது எஸ்.வி.எல்.சிவாவின் வழக்கம். அப்படி நவம்பர் 25-ம் தேதி காலை வ.உ.சி பூங்காவுக்கு வாக்கிங் சென்ற சிவாவை காரில் வந்த 7 பேர் கொண்ட மர்மக்கும்பல் ஒன்று அடித்து இழுத்து கடத்திச் சென்றிருக்கிறது. காரை எங்கும் நிறுத்தாமல் ஈரோட்டைச் சுற்றி காரிலேயே ரவுண்ட் அடித்திருக்கின்றனர். அப்போது, `ஊர்ல இருக்குறவங்கள ஏமாத்தி இல்லீகலாத் தானே பணம் சம்பாரிச்சு வச்சிருக்க. எங்களுக்கு 25 லட்ச ரூபா பணம் வேணும். நாங்க சொல்ற இடத்துக்கு பணத்தை கொண்டு வரச் சொல்லு. விஷயம் வெளிய தெரிஞ்சது, இல்ல நீ ஏதாவது சத்தம் போட்டு வேலை காட்ட நினைச்ச கார்லயே கழுத்த அறுத்துக் கொன்னு ஆத்துல வீசிட்டு போயிடுவோம்..!’ என எஸ்.வி.எல்.சிவாவை கத்தி முனையில் மிரட்டியிருக்கின்றனர். உடனே எஸ்.வி.எல்.சிவா அவருடைய நண்பரனான கண்ணன் என்பவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லி பணத்தை ஏற்பாடு செய்து எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். 15 லட்ச ரூபாய் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்தது என கண்ணன் சொல்ல, அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே வரச் சொல்லியிருக்கிறது அந்த மர்ம கும்பல்.

கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பல்

பைக்கில் ஒருவரை அனுப்பி அந்தப் பணத்தை வாங்கிய கடத்தல் கும்பல், சிறிது நேரத்திலேயே பெருந்துறை பஸ் ஸ்டாண்ட் அருகே எஸ்.வி.எல்.சிவாவை இறக்கிவிட்டதோடு, `போலீஸ்கிட்ட போன உயிரோட இருக்க மாட்ட’ என எச்சரித்து விட்டுச் சென்றிருக்கின்றனர். உயிருக்கு பயந்ததோடு, விஷயத்தை வெளியே சொன்னால் அவமானமாகிவிடும் என எஸ்.வி.எல்.சிவா போலீஸில் புகார் கொடுக்காமல் இருந்திருக்கிறார். இருந்தும் இந்த விஷயம் எப்படியோ போலீஸாரின் காதுகளுக்குச் சென்றது. போலீஸார் விசாரணையில் இறங்கவே வேறு வழியின்றி எஸ்.வி.எல்.சிவா ஒரு மாதத்துக்குப் பிறகு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்திருக்கிறார். அதையடுத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், தர்மராஜ், ராஜன் மற்றும் பிரபு ஆகிய 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 3 பேரை தேடி வருகின்றனர். நடந்தது இப்படியிருக்க ஈரோடு போலீஸாரோ, 'ஜவுளி தொழிலதிபர் கடத்தல்' என்று பாலிஷாக செய்தி வெளியிட்டிருப்பது ஏன் என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

பெரும் செல்வாக்கோட இயங்கிட்டு இருக்க லாட்டரி சீட்டு மாஃபியாவைச் சேர்ந்த எஸ்.வி.எல்.சிவாவை தூக்குனதால மத்த லாட்டரிக்காரங்க பயத்துல இருக்காங்க.

இந்த விவகாரம் குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம். ``எஸ்.பி சசிமோகன் வந்ததுல இருந்து லாட்டரி வியாபாரம் செய்றவங்க மேல கேஸ் போட்டு அதிரடி காட்டுனாரு. இருந்தாலும் அரசியல் செல்வாக்குல தொடர்ந்து லாட்டரி பிசினஸ் நடந்துக்கிட்டு தான் இருக்குது. ஒவ்வொரு லாட்டரி சீட்டு குரூப்பும் தினமும் 5-10 லட்ச ரூபாய் சம்பாதிக்குது. பெரும் செல்வாக்கோட இயங்கிட்டு இருக்க லாட்டரி சீட்டு மாஃபியாவைச் சேர்ந்த எஸ்.வி.எல்.சிவாவை தூக்குனதால மத்த லாட்டரிக்காரங்க பயத்துல இருக்காங்க. இல்லீகலா சம்பாரிக்கிற இவங்க மேல கைய வெச்சா போலீஸுக்கு போக மாட்டாங்கன்னு பிளான் பண்ணி அந்தக் கும்பல் அட்டாக் பண்ணியிருக்கு.

லாட்டரி

கருங்கல்பாளையத்துல லாட்டரி புள்ளி ஒருவர், அமைச்சர் முத்துசாமி பேரைச் சொல்லிக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்காரு. இந்த லாட்டரி மாஃபியாக்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தா கட்சி லெவல்ல கரன்சியை அடிச்சி சரிக்கட்டிடுறாங்க. குறிப்பா, ஈரோடு மாநகர தி.மு.க-வில் முருகக்கடவுள் பெயர் கொண்ட பெரும் புள்ளி ஒருவர் இந்த மாதிரியான லாட்டரி கும்பல்களுக்கு ஆதரவா இருக்காரு. அமைச்சர் முத்துசாமிக்கு நடக்கிற இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சும் ஏன் அமைதியா இருக்காருன்னு தெரியல” என்றனர்.

Also Read: ஈரோடு: மாயமான 2-வது மகள்: 9 வயது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்!



from Latest News https://ift.tt/3EGdHf1

Post a Comment

0 Comments