https://gumlet.assettype.com/vikatan/2021-12/448e49ba-77c3-4cbb-92af-14e8a51f08cf/Capture.PNG"இதுபோன்ற காட்சிகள் தவறான முன் மாதிரியாகிடும்!" - 'பாக்கியலட்சுமி' சீரியல் குறித்துப் புகார்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'பாக்கியலட்சுமி'. இந்தத் தொடரில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்.. மாணவி அவருடைய பள்ளித் தோழிகளிடம் இதுகுறித்து பகிர்ந்து கொள்கிறார். வீட்டில் பெற்றோரிடத்தில் இது குறித்து கூறினால் நம்ப மாட்டார்கள் எனக் கூறி அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

'இதுபோன்ற காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது கண்டனத்துக்குரியது' என சமூக ஆர்வலர் முகமது கோஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

பாக்கியலட்சுமி

''தற்கொலை தவறு... தற்கொலை எதற்குமே தீர்வு இல்லைன்னு தொடர்ந்து நாம வலியுறுத்திட்டு இருக்கோம். பாலியல் சீண்டல்களை தைரியமா பெற்றோர்களிடம் சொல்லணும், இல்லைன்னா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம்னு பசங்களுக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்.

இந்த சூழல்ல, பாலியல் சீண்டல் காரணமா ஒரு பொண்ணு தற்கொலை செய்துகொள்வதாக சீரியலில் காட்டுறதை மிகவும் பிற்போக்குத்தன்மையா பார்க்கிறேன். இதுபற்றிப் புகார் செய்ய அரசு டோல் ஃப்ரீ எண் கொடுத்திருக்கு. அதில் நம்ம பிரச்னையைப் பதிவு பண்ணலாம்னு காட்டியிருக்கலாம். பசங்களுக்கு தைரியம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிற மீடியாக்கள் இப்படி தடம் மாறுவது கண்டிக்கத்தக்கது.

பாக்கியலட்சுமி

இப்போ எல்லா குழந்தைங்ககிட்டேயும் போன் இருக்கு. முன்னாடி பெற்றோர்கள் குழந்தைங்களுடன் சேர்ந்து டிவி பார்ப்பாங்க. தேவையில்லாத காட்சிகள் வந்தா அதை குழந்தைங்க பார்க்க விடாம தவிர்ப்பாங்க. ஆனா, இன்னைக்கு பசங்க அவங்களோட போனில் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காங்க. இதுபோன்ற காட்சிகள் அவங்களுக்கு தவறான முன் மாதிரியாகிடும்.

இதேபோல முன்பு 'கல்யாண வீடு' சீரியலில் தவறா சித்தரிச்சு ஒரு காட்சி எடுத்துட்டாங்கன்னு சொல்லி சன் டி.வி-க்கு அபராதம் விதிச்சாங்க. ஒரு வாரத்துக்கு அந்த சீரியல் ஆரம்பிக்கும்போது, 30 விநாடிகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்னும் Broadcasting Content Complaints Council உத்தரவு போட்டது.

பாக்கியலட்சுமி

சீரியலுக்கென்றும் சில கட்டுப்பாடுகள் இருக்கு. இஷ்டத்துக்கு எதையும் எடுத்திட முடியாது. இப்போ சமூகத்தில் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிற பசங்க தைரியமா அவங்க பெற்றோர்களிடத்தில் சொல்லணும்னு தொடர்ந்து வலியுறுத்திட்டு வர்ற நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை பண்ணிக் கொள்வதாக காட்சிப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கொஞ்சமும் சமூக அக்கறை இல்லாமல் இதுபோன்ற காட்சிகள் எடுத்திருக்காங்க. அது ஒருநாளோடு சீரியலில் ஒளிபரப்பாகி முடிஞ்சுடவில்லை. ட்ரோல், மீம்களில் இந்தக் காட்சிகள் அதிகமா பகிரப்பட்டுட்டு இருக்கு. யூடியூப் தளத்திலும் இருக்கு. அந்தக் காட்சிகளை அங்கிருருந்து உடனடியா நீக்கணும்னு புகார் மனு கொடுத்திருக்கிறேன்'' என்றார் அவர்.



from Latest News https://ift.tt/3JwHvy3

Post a Comment

0 Comments