https://gumlet.assettype.com/vikatan/2021-12/94b9bf3a-ac0f-417f-9091-5a842cd4be72/IMG_20211230_WA0096.jpgபுதுக்கோட்டை: சிறுவன் தலையிலிருந்து தோட்டா அகற்றம்... பயிற்சி மையம் செயல்படத் தற்காலிகத் தடை!

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில், நேற்றைய தினம் 25-க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பயிற்சியின்போது, ஒரு வீரர் சுட்ட தோட்டா ஒன்று, அங்கிருந்து, சுமார் 2 கி.மீ தொலைவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீட்டுக்கு வெளியே இருந்த புகழேந்தி (11) என்ற சிறுவன் தலையில் பாய்ந்ததில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுவன்

தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே சிறுவன் சிகிச்சை பெற்றுவருகிறான். சிறுவனுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிடம், அவரின் தாய், ``சார் எப்படியாவது என் மகனைக் காப்பாத்திடுங்க சார்..!" எனக் கதறியது, அங்கிருந்த அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியது.

மகனுக்கு நடந்த சம்பவம் குறித்துப் பேசியவர், ``நானும், என் மகனும் வீட்டுக்கு வெளியில உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். சின்னச் சத்தத்தோட ஏதோ என்னைய உரசிக்கிட்டு போற மாதிரி இருந்துச்சு. அடுத்த நொடியே கொஞ்சம் பெருசா ஒரு சத்தம் கேட்டுச்சு. திரும்பிப் பார்த்தா, பையன் பேச்சு, மூச்சில்லாம மயங்கி விழுந்துட்டான்.

குண்டு பாய்ந்த சிறுவன்

உடனே தலையிலருந்து ரத்தம் பொல பொலனு வந்துச்சு. உடனே மருத்துவமனைக்குத் தூக்கியாந்துட்டோம். எனக்கு எதுவுமே, வேண்டாம். பையன் மட்டும் பிழைச்சா போதும்" என்று கதறி அழுதார்.

துப்பாக்கித் தோட்டா சிறுவன்மீது பாய்ந்த விவகாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் மீது புதுக்கோட்டை வெள்ளனூர் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

பசுமலைப்பட்டியில் செயல்பட்டுவரும் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் செயல்பட, தற்காலிகத் தடை விதித்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர். ஆனால், ஏற்கெனவே அந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதால் அரசு அந்தப் பயிற்சித் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன்

இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன், ``மிகுந்த பாதுகாப்புக்கு இடையில்தான் எப்போதும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். துரதிஷ்டவசமாக நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது, இந்த பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. விசாரணையில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

Also Read: துப்பாக்கி சுடும் பயிற்சி... சி.ஐ.எஸ்.எஃப் வீரர் சுட்ட தோட்டா பாய்ந்து சிறுவன் படுகாயம்!



from Latest News https://ift.tt/31ecj5B

Post a Comment

0 Comments