தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான 182.50 ஏக்கர் நிலங்களுக்கு சட்டவிரோதமாக அ-பதிவேட்டில் திருத்தம் செய்து பட்டா போடப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய இரண்டு வட்டாட்சியர்கள், இரண்டு துணை வட்டாட்சியர்கள், இரண்டு நில அளவையர்கள் மற்றும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் என மொத்தம் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த நிலங்கள் மீட்கப்பட்டு அ-பதிவேட்டில் மீண்டும் அரசு நிலம் என மாற்றப்பட்டுள்ளது. இதில் வீட்டுமனை விற்பனை செய்யப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யவும் மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வடவீரநாயக்கன்பட்டியில் கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கனிமவளத்துறை, புவியியல் துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெரியகுளம் தாலுகா தலைமை நில அளவையர் ஸ்டீபன், பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், நில அளவை அலுவலகத்துக்கும் வந்து செல்கிறார். அவர் அரசின் கோப்புகளில் மாற்றம் செய்ய உத்தரவிடுவது, அவரே ஆவணங்களில் திருத்தம் செய்வது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் நில மோசடி வழக்கில் இருந்து தப்பிக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் பணியிடை நீக்கத்தில் இருக்கும் போது அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களில் மாற்றம் செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் சம்பந்தப்பட்ட அலுவலகத்து வந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நில மோசடி வழக்கில், அதிகாரிகள் மட்டுமில்லாது அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் இந்த மோசடி நடந்திருப்பாதலும், அவரின் ஆதரவாளருக்கு இதில் தொடர்பு இருப்பதாலும் குற்றத்தை மறைக்க முயற்சிகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஸ்டீபனிடம் விசாரித்தோம். ``இந்த விடியோ ஒன்றரை மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. எனது அலுவலகத்தில் பணியாற்றக் கூடிய நில அளவையர் சுப்புராஜிடம் பணிவிவரங்களை முறையாக சமர்பிக்கும்படி பேசிக் கொண்டிருந்தேன். அரசு ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாகிவிட்டதால் அவ்வளவு எளிதில் எதையும் திருத்தம் செய்ய முடியாது. கடந்த டிசம்பர் 7 -ம் தேதி அரசு நிலம் தனியாருக்கு பட்டா போடப்பட்டதை கண்காணிக்க தவறியதால் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு நகல் எனக்கு டிசம்பர் 16 -ம் தேதி கிடைத்தது. அதையடுத்து நான் அலுவலகம் வரவில்லை'' என்றார்.
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் விசாரித்தோம். ''அந்த விடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க உள்ளோம். சப்-கலெக்டர் ரிசப்பிடமும் இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.
from Latest News https://ift.tt/trb2zFJKe
0 Comments