சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 16 வயது சிறுமி குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். இவரை காதலிப்பதாக புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கருணா என்கிற கருணாகரன் (22) என்பவர் ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதை நம்பிய சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு அழைத்துச் சென்ற கருணாகரன், திருமணம் செய்து அவருடன் தனிக்குடித்தனம் நடத்தியிருக்கிறார். அப்போது சிறுமியை கருணாகரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்தச் சூழலில் சிறுமியைக் காணவில்லை என அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிவந்தனர். பின்னர் காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுமியை கருணாகரன் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கருணாகரனையும் சிறுமியையும் போலீஸார் மீட்டு விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு நடந்த கொடுமைகள் வெளியில் தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் அம்மா, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கருணாகரனை 10.2.2016-ல் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கருணாகரன் மீது புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மேலும் இந்த வழக்கை துரிதப்படுத்தும் வகையில் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்த வழக்கில் 23.2.2022-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கருணா என்கிற கருணாகரன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் சிறை தண்டனை மற்றும் 36,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்ததோடு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்திய இன்ஸ்பெக்டர், மற்றும் போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.

இந்த வழக்கு குறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``கருணா என்கிற கருணாகரனுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. அதன்பிறகுதான் சிறுமியை காதலித்து திருமணம் செய்து அயனாவரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் சிறுமி மீது சந்தேகமடைந்த கருணா, சிகரெட்டால் சுட்டு சிறுமியைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார். அதோடு அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கருணாகரனின் கொடுமையை தாங்க முடியாத சிறுமி தன்னுடைய அம்மாவிடம் விவரத்தைக் கூறியுள்ளார்.
இதையடுத்து கருணாகரன் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தோம். கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தோம். இந்த வழக்கு விசாரணையின்போது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனால் இந்த வழக்கில் குற்றவாளி கருணாகரனுக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்தது" என்றனர்.

கருணாகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர்கள், ``குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்), சிறுமியைக் கடத்திய குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளும் கத்தியால் அறுத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஓராண்டும் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்திய சூடு வைத்த குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டுகள் என 41 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை கருணாகரன், ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். அனைத்து தண்டனைகளையும் அனுபவித்தபிறகு ஆயுள் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக 7 லட்சம் ரூபாயும் வாங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
from Latest News https://ift.tt/oItqku8
0 Comments