ஒட்டுமொத்த உலகமும் தற்போது ஓர் பிரச்னையை உற்றுநோக்கி கொண்டிருக்கிறதென்றால் அது உக்ரைன் மீது ரஷ்யா நடத்திக்கொண்டிருக்கும் ராணுவ யுத்தம் தான். கிட்டத்தட்ட மூன்று நாள்களுக்கு மேலாக ரஷ்யப் படைகள் உக்ரைனில் போர் புரிந்து வருகின்றன. உக்ரைனும் தன்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக ரஷ்யப் படைகளை எதிர்த்து வருகிறது. மேலும், இந்த போரில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், புளோரிடாவின் ஆர்லாண்டோவில் நேற்று நடந்த கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் கலந்துகொண்டு, உக்ரைனில் நடந்து கொண்டிருக்கும் போர் குறித்து பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ``அமெரிக்கா ஒரு வலிமையான அதிபரைக் கொண்டிருக்கும்போது உலகம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். மாறாக அமெரிக்கா பலவீனமான அதிபரைக் கொண்டிருக்கும்போது உலகம் ஆபத்தில் இருக்கும். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகியதே, ரஷ்ய அதிபர் புதினை உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்தது.

நேட்டோ நாடுகள் அவ்வளவு புத்திசாலிகள் இல்லை, அவர்கள் புத்திசாலித்தனத்திற்கு நேர்மாறாக பார்க்கிறார்கள். பிரச்னை புதின் புத்திசாலி என்பதில் இல்லை, அவர் புத்திசாலிதான், ஆனால் உண்மையான பிரச்னை என்னவென்றால், நமது தலைவர்கள் ஊமைகளாக இருக்கிறார்கள். உக்ரைன் விவகாரத்தில் புதின் பைடனை ஒரு டிரம்ப் கார்டு போல விளையாடுகிறார்.

நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் இவ்வளவு குழப்பமானதாக இருந்ததில்லை. ரஷ்யா வேறொரு நாட்டின் மீது படையெடுக்காமலிருந்த 21-ம் நூற்றாண்டின் ஒரே அதிபராக நான் மட்டுமே இருக்கிறேன்" என பேசினார்.

முன்னதாக இந்த மாநாட்டில், "அமெரிக்க அதிபர் புஷ்-ன் ஆட்சியின் கீழ், ரஷ்யா ஜார்ஜியாவை ஆக்கிரமித்தது. ஒபாமாவின் ஆட்சியின் கீழ், ரஷ்யா கிரிமியாவைக் கைப்பற்றியது. தற்போது பைடனின் ஆட்சியின் கீழ், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கிறது" என ட்ரம்ப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/iNSRFcb
0 Comments