தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தந்தை பெரியாரைப் போல வேடமிட்டு நடித்த குழந்தைகள் குறித்து மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு என்பவரை கயத்தார் காவல் நிலையப் போலீஸார் கைது செய்தனர்.

அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் சமுதாயத் தலைவர்களை இழிவு படுத்தும் வகையில் கருத்து பதிவிடுபவர் யாராக இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஒரு சிறுமி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஒரு சமூக தலைவரைப் போல வேடம் அணிந்த வீடியோ ஒரு முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு கோவில்பட்டியைச் சேந்த வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் சாதி மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், சமுதாயத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று சமுதாயத் தலைவர்களை இழிவுபடுத்தி, சாதி, மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் வன்முறைச் செய்திகளையோ, புகைப்படங்களையோ, வீடியோக்களையோ சமூக வலைதங்களில் பரப்புபவர் யாராக இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷ்குமார் பாபு, கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக தற்காலிக பணியிடத்தில் பணிபுரிந்து வருகிறார். கயத்தார் தி.மு.க நகரச் செயலாளர் சுரேஷ்கண்ணன், கயத்தார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வெங்கடேஷ்குமார் பாபுவை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
from Latest News https://ift.tt/N1UFi2c
0 Comments