https://ift.tt/5rmQbEn Vikatan: உதடுகளுக்கு மேல் வளரும் முடி; என்னதான் தீர்வு?

எனக்கு 30 வயதாகிறது. என் முகத்தில் உதட்டிற்கு மேல் அதிகமாக முடி வளர்கிறது. இதற்காக லேசர் சிகிச்சை பெற்றேன். ஆனால் பலனளிக்கவில்லை. பிறகு ஹார்மோன் பிரச்னை என்பது தெரிந்தது. மஞ்சள் உபயோகித்தும் பலன் இல்லை. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

-கதுரா ரதி (விகடன் இணையத்திலிருந்து)

சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்.

``30 வயதில் உங்களுக்கு முகத்தில் உதட்டுக்கு மேல் வளர்வதாகக் குறிப்பிட்டிருக்கும் ரோம வளர்ச்சிக்கு ஹார்மோன் சமநிலையின்மை முக்கிய காரணமாக இருக்கும். எல்லாப் பெண்களுக்கும் இது போன்ற ரோம வளர்ச்சி இருப்பதில்லை. பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ளவர்களுக்கு இப்படி ஏற்படலாம். அதாவது பிரச்னையின் காரணமாக ஆண் ஹார்மோனின் அளவு பெண்களின் உடலில் அதிகரிப்பதால் இப்படி முடி வளர்ச்சி காணப்படும். குடும்ப பின்னணி காரணமாகவும் சில பெண்களுக்கு உதட்டுக்கு மேல் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கக்கூடும்.

இந்த ரோம வளர்ச்சியைத் தற்காலிகமாக சரிசெய்ய வழிகள் இருந்தாலும் நிரந்தரமாக சரியாக்க லேசர் சிகிச்சை பெரிதும் உதவும். நீங்கள் லேசர் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் எந்த மாதிரியான லேசர், எத்தனை சிட்டிங்ஸ் எடுத்துக்கொண்டீர்கள் என்ற தகவல்கள் இல்லை.

முடி வளர்ச்சியைத் தடைசெய்யக் கூடிய நவீன லேசர் சிகிச்சைகள் இன்று நிறைய வந்துவிட்டன. இந்தச் சிகிச்சையில் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் வேர்க்கால்கள் அழிக்கப்பட்டு அவை மீண்டும் வளர்வது தடை செய்யப்படும். முன்பிருந்த லேசர் சிகிச்சைகள் அடர்த்தியான முடிகளை மட்டுமே நீக்குவதாக இருந்தன. இப்போதுள்ள நவீன லேசர் சிகிச்சைகள் மெல்லிய ரோமங்களைக்கூட வளரவிடாமல் தடுக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

மஞ்சள்

இந்தச் சிகிச்சையில் 100% பலன் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் 95 சதவிகித பலன் நிச்சயம் இருக்கும். அதன்பிறகு மெயின்டனென்ஸ் சிகிச்சையின் மூலம் ஓரளவு அதைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த லேசர் சிகிச்சையை 4 வாரங்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி மஞ்சள் பூசுவது போன்ற சிகிச்சைகள் இந்த முடி வளர்ச்சியை முற்றிலும் நிறுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/SzGD3b0

Post a Comment

0 Comments