என் வயது 30. மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். எனக்கு பீரியட்ஸ் ஒழுங்காக வருகிறது. ஆனால் இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாளில் அதிக ப்ளீடிங் இருக்கிறது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபோது எனக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகச் சொன்னார். எனக்கு இதனால் வலி எதுவும் இல்லை. இதற்கு என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?
- ஜோதி (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் நிவேதிதா காமராஜ்.
``பீரியட்ஸ் சுழற்சி முறையாக இருக்கிறது, ஆனாலும் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஸ்கேன் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட கர்ப்பப்பைக் கட்டி எந்த விதமானது என்று தெரியவில்லை. கர்ப்பப்பைக் கட்டியில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று ஃபைப்ராய்டு எனப்படும். இன்னொன்று எண்டோமெட்ரியல் பாலிப், அதாவது கர்ப்பப்பையின் உள் சுவரில் சதை வளர்ச்சி போன்று காணப்படுவது. அதுவும் சின்ன கட்டி போலத்தான் காட்சியளிக்கும். எனவே இந்த இரண்டில் எந்தவகையான கட்டி, அது எந்த இடத்தில் இருக்கிறது, எந்த அளவில் இருக்கிறது என்பதை வைத்துதான் அடுத்தகட்ட சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.
ஃபைப்ராய்டிலும் பல வகை உண்டு. அதில் முக்கியமானது இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்டு (Intramural fibroid). அதாவது கர்ப்பப்பையின் தசைகளுக்குள் இருக்கும் ஃபைப்ராய்டு இது. அது 4 செ.மீக்கு மேல் இருந்தால் வலியுடன் கூடிய ரத்தப்போக்கு இருக்கலாம். ஒருவேளை அளவில் சிறியதாக, கர்ப்பப்பையின் உள் சுவருக்குள் வளர்கிறது என்றால் ப்ளீடிங் அதிகமிருக்கும், ஆனால் வலி இருக்காது.

அதே மாதிரி எண்டோமெட்ரியல் பாலிப் பாதிப்பிலும் அதிக அளவு ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் பீரியட்ஸ் சுழற்சி முறை தவறாது. எனவே உங்களுடைய கட்டியின் அளவும் இருப்பிடமும் தெரிந்தால்தான் இது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும். எனவே உங்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களை மிகச் சரியாக வழிநடத்துவார்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/7DL1Noz
0 Comments