https://gumlet.vikatan.com/vikatan/2020-06/b067194d-a666-4b1f-adc0-57d40aec57f7/puducherry.jpgபுதுச்சேரி: `நடுத்தெருவில் நிற்கிறார்கள்...' - முன்னாள், இந்நாள் அமைச்சர்களை வறுத்தெடுத்த நாராயணசாமி

புதுச்சேரி ஊசுடு தொகுதியில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``ஓடுகாலிகளை நம்பி கட்சியை நடத்தக் கூடாது. யார் உறுதியாக கட்சியில் நிற்கிறார்களோ அது 100 பேராக இருந்தாலும் அவர்களை வைத்து கட்சி நடத்தலாம். 2016 தேர்தல் நமக்கு ஒரு படிப்பினையை கற்றுக் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் பதவியை அனுபவித்து சென்றவர்களில் ஊசுடு தொகுதியில் ஒருவர் நடுத்தெருவில் நிற்கிறார். அதேபோல் ஏனாம் தொகுதியில் ராஜ்யசபா எம்.பி வேண்டும் என்று சென்றவர் இன்று நடுரோட்டில் நிற்கிறார். இன்னொருவர் முதல்வர் கனவில் சென்றுவிட்டு, தற்போது தொப்பி போட்டுக் கொண்டு சுற்றி வருகிறார். யாருக்கும் மானம், மரியாதை எதுவும் கிடையாது. அரசியலுக்கு வர வேண்டும்... அரசியல் வியாபாரம் செய்ய வேண்டும்... கொள்ளை அடிக்க வேண்டும், மக்களை ஏமாற்ற வேண்டும்.

புதுச்சேரி அரசு

பொய் சொல்ல வேண்டும். இப்படி வாழ்வது ஒரு வாழ்க்கையா? தன்மானம் வேண்டும். ஒருவனுக்கு மன உறுதி இருக்க வேண்டும். கை சுத்தமாக இருக்க வேண்டும். எல்லோரும் ஏன் ஓடினார்கள்? பிரதமர் மோடி சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானத்துறை என மூன்று மந்திரங்கள் வைத்துள்ளார். அதற்கு பயந்து ஓடுகிறார்கள். என்னை கூட மிரட்டி பார்த்தார்கள். ஆனால் நான் சாகும் வரை காங்கிரஸ் தொண்டனாக இருந்துதான் சாவேன். பாஜகவுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை என்றேன். பின்னால் அழுக்கு மூட்டை வைத்திருக்கும் ஆட்கள் தான் பயப்படுவார்கள். நான் பயப்பட மாட்டேன். 4 ஆண்டுகள் 10 மாதங்கள் பதவியை அனுபவித்து விட்டு பாஜகவுக்கு ஒடி என்ன கிடைத்தது. உட்கார கூட வைப்பதில்லை. முதல்வர் அலுவலகத்துக்கு சென்றால் கையை கட்டிக் கொண்டுதான் நிற்கிறார்கள். இந்த ஊசுடு தொகுதியில் ஒரு அமைச்சர் இருக்கிறார்.

அவருக்கும் கோமாளிக்கும் வித்தியாசமே கிடையாது. அரசு ஆம்புலன்சை அவரின் அலுவலகத்தில் வைத்துக் கொள்கிறார். பெரிய பெரிய கட்-அவுட்களை வைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தியில் வேறு பேனர் வைக்கிறார்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி புதுச்சேரிக்கு ஆட்சிக்கு வந்து ஓராண்டாகிறது. இவர்கள் ஒரு ரூபாய் கூடுதலாக வாங்கி இருப்பார்களா? காங்கிரஸ் ஆட்சியில் 10% கூடுதலாக நிதி வாங்கினோம். ஏன் உங்களால் கூடுதலாக நிதி வாங்க முடியவில்லை? என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை. புதுவை வந்த அமித் ஷா என்ன அறிவித்தார்? புதிய திட்டம் எதையாவது சொன்னாரா? நம்முடைய ஆட்சியில் கிரண் பேடி தடுத்து நிறுத்திய கோப்புகளை தற்போது தூசு தட்டி எடுத்து ஒப்புதல் கொடுக்கிறார்கள். புதுவையில் ஒரு பொம்மை ஆட்சி நடக்கிறது.

துணைநிலை ஆளுநர் ஆட்டி வைக்கிறார். அதற்கு எல்லோரும் ஆடுகிறார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால்தான் புதுச்சேரிக்கு விடிவுகாலம் பிறக்கும். முதல்வர் அலுவலகத்திற்கு வருகிறார். வீட்டிற்கு செல்கிறார். அதோடு சரி. தூங்கி கிடந்தவர் கையில் ஆட்சி வந்துவிட்டது. மக்களை பற்றி சிந்திக்காதவர்தான் முதல்வர் ரங்கசாமி. நாம் பேனர் வைத்தால் உடனே அங்கு போலீஸார் வந்து நிற்பார்கள். அங்கு சென்று போலீஸாரை நிற்க சொல்லுங்கள் பார்ப்போம். காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் நடுநிலையாக நிற்க வேண்டும். அமித் ஷா வந்து சென்றபிறகு பேனரை அகற்றுங்கள் என்கிறார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகள்தான் புதுவையில் இருக்கிறார்கள். மோசமான ஆட்சிக்கு முடிவுகட்ட புதுவையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்” என்றார்.



from Latest News https://ift.tt/B0cbAa2

Post a Comment

0 Comments