தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசி விழுந்ததால் ஏற்பட்ட மின் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்திற்கான கோயில் உள்ளது. ஆண்டு தோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் விமர்சையாக சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவிழா தொடங்கியிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 10 மணிக்கு ஆரம்பமாகியிருக்கிறது.

சுமார் 15 அடி உயரம் கொண்ட பல்லக்கு எனப்படும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அலங்கார மின் விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின்புறம் பெரிய ஜெனரேட்டர் வசதியும் செய்திருந்தனர். ஊர் பெரியவர்கள், சிறுவர்கள் என பலரும் தேரை வடம் பிடித்து ஊர் முழுக்க இழுத்துச் சென்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய் உடைத்து வழிப்பட்டுள்ளனர்.
ஊர் பொது மக்கள் அனைவரும் இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வந்துள்ளனர். தேர் ஊர்வலம் கிட்டதட்ட முடியும் நிலைக்கு வந்திருக்கிறது.

இந்நிலையில் அப்பர் மடத்திற்கு செல்வதற்காகச் சாலையின் வளைவில் தேரை இழுத்துள்ளனர். அப்போது அருகே இருந்த பள்ளத்தில் தேரில் சக்கரம் இறங்கியுள்ளது. தேர் நின்ற இடத்துக்கு மேல் பகுதியில் உயர் மின் அழுத்தக் கம்பி சென்றுள்ளது. தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் பகுதி உயர் மின் அழுத்த மின் கம்பியில் உரசியது.

இதில் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் தேர் தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆண்கள் சிறுவர்கள் எனப் பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மின்சாரம் பாய்ந்த பலர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர்.
தேர் வருவதற்காகச் சாலையில் தண்ணீர் ஊற்றியுள்ளனர் அதிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இரவு சுமார் 3 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அந்த இடத்திலேயே 10 பேர் வரை உயிரிழந்தனர். மின் விபத்தில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து பார்வையிட்டனர்.

இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊர் மக்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு திரண்டு கதறி அழுதது பார்ப்பவர்கள் மனதௌ உலுக்குவதாய் அமைந்தது. உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் உடலைப் பார்த்துக் கதறினர். `ஒரு நிமிஷம் கூட என் மகனை விட்டுட்டு இருக்க மாட்டேனே என் புள்ள எங்கூட இல்லையே’னு மார்பில் அடித்துக் கொண்டார் ஒரு தாய். 94-வது ஆண்டாக இந்த தேர் விழா நடைபெற்று வருகிறது. இது வரை ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்பட்டதில்லை. இந்த முறை ஆறாத வடுவை ஏற்படுத்தும் அளவிற்கான விபத்து ஏற்பட்டு விட்டதாக ஊர் பெரியவர்கள் கண்கலங்கியபடி பேசிக் கொண்டனர்.
from Latest News https://ift.tt/iDvsMy3
0 Comments