என் வயது 27. எனக்கு உடலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கொழுப்பு அதிகமிருக்கிறது. ஸ்லிம்மிங் சென்டர்களில் `ஸ்பாட் ரிடக்ஷன்' என்ற பெயரில் இப்படி கொழுப்பு அதிகமிருக்கிற பகுதிகளை இளைக்கவைக்க சிகிச்சை தரப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அதென்ன ஸ்பாட் ரிடக்ஷன்? நான் என் உயரத்துக்கேற்ற சரியான எடையைத் தக்கவைப்பது சாத்தியமே இல்லையா?
- மித்ரா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.
``நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி உடலின் சில பகுதிகளிலுள்ள கொழுப்பை மட்டும் குறைக்கும் ஸ்பாட் ரிடக்ஷன் சிகிச்சை என்பது சாத்தியமே இல்லை. அது சாத்தியம் எனச் சொல்வதையும் நம்பாதீர்கள். ஒட்டுமொத்த உடலுக்குமான உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உடலில் எங்கெல்லாம் தேவையற்ற கொழுப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் குறையும். அதுதான் சரியானதும்கூட. மற்றபடி வயிற்றை மட்டும், மார்பகப் பகுதியை மட்டும், கைகளை மட்டும் இளைக்கச் செய்வதெல்லாம் சாத்தியமில்லை.
நீங்கள் நம்பகமான ஃபிட்னெஸ் பயிற்சியாளரை சந்தித்து உங்கள் இலக்கு பற்றி ஆலோசியுங்கள். உங்களுடைய வயது மற்றும் உயரத்துக்கேற்ப எத்தனை கிலோ எடை இருக்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வொர்க் அவுட் செய்யத் தொடங்குங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது என்பது சுலபமானதல்ல. பல வருடங்கள், பல மாதங்கள் உழைப்பு தேவைப்படுகிற விஷயம் அது.

அப்படிப் பல நாள்கள் கடினமாக உழைக்கத் தயாராக இல்லாமல்தான் பலரும் சுலபமான குறுக்குவழிகளை நாடிச் செல்கிறார்கள். பல வருடங்களாக எந்தப் பயிற்சியையும் செய்யாமலிருந்துவிட்டு, திடீரென வொர்க் அவுட் செய்யத் தொடங்கி, மூன்றே மாதங்களில் ரிசல்ட் வேண்டும் என எதிர்பார்ப்பதும் தவறு. நீங்கள் அடைய நினைக்கிற உடல் எடைக்கு கட்டுப்பாடான உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகள் என கொஞ்சம் கடினமான பாதையில்தான் முயற்சி செய்ய வேண்டும். அதுதான் உங்களுக்குப் பலன் தரும்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/CGMdqYr
0 Comments