புதுச்சேரியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், ``காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறக்க பாஜகவை சேர்ந்த வெங்கைய நாயுடுவை அழைத்துள்ளனர். அதேநேரத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா, பாஜகவை ஓட, ஓட விரட்டுவோம் என பேசியுள்ளார்.
கருணாநிதி சிலையை திறக்க வெங்கையா நாயுடுவை அழைத்ததை கைவிட வேண்டும். அல்லது பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய திருச்சி சிவா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மாதம் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் பாஜக தலைவர்களை அழைத்திருந்தனர். ஆனால் எந்த பாஜக தலைவர்களும் அந்த திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. மத்திய அரசை எதிர்ப்பது, அதன் திட்டங்களை விமர்சிப்பது என ஒருபுறமும், அவர்களையே சிலை திறக்க அழைப்பது என மறுபுறமும் திமுக நாடகமாடுகிறது.
இந்த சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதேசமயம் அது தங்களை வேதனைப்படுத்துவதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம், ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோர் கூறினர். அத்துடன் பேரறிவாளன் விடுதலை நாளை கறுப்புதினமாக அனுசரித்தனர்.
தற்போது மின் துறை தனியார்மயத்தை எதிர்த்து கூட்டணி கட்சிகளோடு இணைந்து போராடப்போவதாக சொல்கின்றனர். இந்த போராட்டத்தில் எப்படி மற்ற கட்சியினரோடு காங்கிரஸார் ஒன்றாக பங்கேற்பார்கள்?’’ என்றார்.
from Latest News https://ift.tt/sKL1D5y
0 Comments