குஜராத் துறைமுகத்துக்கு அடிக்கடி போதைப்பொருள்கள் மற்ற சரக்குகளோடு சேர்த்து கடத்தி வரப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது. அதோடு பாகிஸ்தானில் இருந்து இரவு நேரங்களில் படகுகளிலும் குஜராத்துக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. தற்போது மீண்டும் 500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத் துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு உப்பு மூட்டைகள் வந்து இறங்கியது. ஈரானில் இருந்து வந்த அந்த உப்பு மூட்டையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் ஈரானில் இருந்து வந்த உப்பு மூட்டையை சோதனை செய்தனர்.

ஆப்ரேஷன் நாம்கீன் என்ற பெயரில் நடத்தப்பட்ட சோதனையில் உப்பு மூட்டையில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்ததில் அதில் கோகைன் என்ற போதைப்பொருள் கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்து உப்பு மூட்டைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 52 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூபாய் 500 கோடியாகும். அவற்றை இறக்குமதி செய்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே குஜராத் துறைமுகத்திற்கு அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டில் மட்டும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மட்டுமல்லாது பஞ்சாப் எல்லைகள் வழியாகவும் போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகிறது.
from Latest News https://ift.tt/f3WQpUC
0 Comments