தமிழ்நாட்டில் அரசு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். அவரை தமிழ்நாடு ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு வந்த மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்த பிரதமர் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய நேரமிது. தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்'' எனப் பேசினார்.
முதல்வரின் பேச்சை பா.ஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு மு.க ஸ்டாலின் ஒரு சான்று. முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை மேடையில் அமர வைத்துவிட்டுப் பேசிய பேச்சு ஒரு அரசியல் நாடகம். அது திமுக-வுக்கு கைவந்த கலை.
1974-ல் திட்டம்போட்டு கலைஞர் கருணாநிதி, இந்திரா காந்தி-யின் ஆட்சியில் கச்சத்தீவைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, அதற்குப் பின்னால் 1976-ல் இவர்கள் போட்ட ஒப்பந்தத்தை மீறி முழுமையாகக் கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்துவிட்டு மேடையில் என்ன தைரியத்தில் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் எனக் கேட்கிறார்? கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று சொல்வதற்குத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் ஸ்டாலின் குடும்பத்துக்கு அந்த உரிமை கிடையாது. இலங்கை மக்களுக்காக நமது பிரதமர் 2.1 பில்லியன் டாலர் வழங்கி உதவியிருக்கிறார்.
மேலும், ஜிஎஸ்டி எப்படிச் செயல்படுத்தப்படுகிறது... அதனுடைய செயல்திட்டம் என்ன என்பதே தெரியாமல் தமிழ்நாட்டின் முதல்வர் பேசியிருப்பது தமிழ்நாட்டிற்கு பெரும் அவமரியாதையாக இருக்கிறது. ஜிஎஸ்டி குழுவில் ஒவ்வொரு மாநிலத்தின் நிதித் துறை அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியது தான் ஜிஎஸ்டி அமைப்பு. அவர்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கு எப்போது பணம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்வார்களோ அப்போது அந்த பணம் வரும். அதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நினைத்தால் கூட தடுக்க முடியாது.
இன்று தமிழ்நாடு மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டிய கடன் 25,979 கோடி, ஆனால் பாஜக தலைவர்கள் எப்போதாவது அதைப் பற்றி பேசியிருப்பார்களா?. ஒவ்வொரு எம்.எல்.ஏ-வும் 200 பேரைக் கொண்டுவர வேண்டும் என டாஸ்க் கொடுத்து மேடை முன்பு உட்கார் வைத்து... என்ன வம்பு சண்டைக்கு வருகிறீர்களா? இது என்ன போட்டி அரசியலா? இதை எல்லாம் செய்துவிட்டு திராவிட மாடல் எனப் பொய் பிரசாரம் வேறு. முதல்வர் சொன்ன ஒவ்வொரு தகவலுக்கு பாஜக மறுத்து அறிக்கை வெளியிடும்" எனக் காட்டமாகப் தெரிவித்தார்.
from Latest News https://ift.tt/XJAcvuI
0 Comments