எந்த வயதிலிருந்து ஃபேஷியல் செய்துகொள்ளலாம்? ஆன்டி ஏஜிங் க்ரீம்களை எந்த வயதிலிருந்து பயன்படுத்த வேண்டும்? ஆன்டி ஏஜிங் க்ரீம் தேர்ந்தெடுக்கும்போது எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்
அடிப்படையான ஒரு கிளீனிங், மசாஜ், பேக்... இவை அடங்கியதுதான் பார்லர்களில் செய்யப்படுகிற ஃபேஷியல் நடைமுறை. பொதுவாக 13 வயதிலிருந்து தொடங்கும் டீன் ஏஜில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பருக்கள் உள்ளிட்ட சரும பிரச்னைகள் வரும். எனவே சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்தி, சரியான சருமப் பராமரிப்பு பொருள்களை உபயோகிப்பதன் மூலம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அந்த வயதிலிருந்தே ஃபேஷியலை தொடங்கலாம். அதேபோல வயதாக, ஆக ஃபேஷியலை முறையாகச் செய்யும்போது முகம் இளமையாகவும் வறட்சியின்றியும் இருக்கும்.
ஆன்டி ஏஜிங் க்ரீம்களை எந்த வயதிலிருந்து உபயோகிக்கத் தொடங்கலாம் என்பதைவிடவும் அவை யாருக்குத் தேவை என்பதுதான் முக்கியம். சருமத்தை தினமும் கிளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங் செய்து பார்த்துக்கொள்கிறவர்கள் என்றால் ஆன்டி ஏஜிங் க்ரீம் பயன்படுத்துவதை தாமதமாகவே தொடங்கலாம். இவர்களுக்கு எப்போதும் சருமம் ஈரப்பததத்துடன் இருக்கும்.
சருமத்துக்கு எந்தப் பராமரிப்பையும் கொடுக்காதவர்களுக்கு அது வறண்டு, முதுமையின் அடையாளங்கள் சீக்கிரமே வரத் தொடங்கும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் 30 ப்ளஸ் வயதில்தான் வளர்சிதை மாற்ற செயல்பாட்டின் வேகம் குறையத் தொடங்கி, ஹார்மோன் மாற்றங்களும் ஆரம்பிக்கும் என்பதால் அந்த வயதில்தான் சருமத்தில் முதுமைக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.
வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை எப்படிப் பாதுகாக்கிறீர்கள், என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடுகிறீர்கள், உங்களுடைய ஸ்ட்ரெஸ் அளவு ஆகியவற்றை வைத்துதான் சருமத்தின் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும். அப்படிப் பார்த்தால் இந்த எல்லா விஷயங்களும் இன்றைய வாழ்க்கை முறையில் மாறிவிட்டதால் 20 ப்ளஸ்சிலேயே பலருக்கும் சரும ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது.
சராசரிக்கு முன்னதாகவே சருமத்தில் சுருக்கங்கள் வரும். முகத்திலுள்ள கொழுப்பு குறையும். ஆன்டி ஏஜிங் க்ரீம்களில் ஹைலுரானிக் ஆசிட் தான் பிரதானம். இது சருமத்தை புஷ்டியாக வைத்திருக்க உதவும். பிறந்த குழந்தையின் சருமம் புஷ்டியாக இருக்க காரணம், அதன் உடலில் இந்த அமிலம் அதிகமிருப்பதுதான். வயதாக, ஆக இதன் சுரப்பு குறைந்துகொண்டே வருவதால் சுருக்கங்கள் வரத் தொடங்கும். ஆன்டி ஏஜிங் க்ரீம் மூலமாக இதை வெளிப்புறமாகப் பூசுவதால் சருமம் ஈரப்பதத்துடனும் பொலிவுடனும் இருக்கும்.
அடுத்து வைட்டமின் ஏவின் ஒரு பகுதியான ரெட்டினால்... இது சரும சுருக்கங்களைக் குறைத்து டைட் ஆக்கும். இதை சரும மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உபயோகிப்பதுதான் சரியானது. இவை தவிர இயற்கையான பக்குசால் (Bakuchiol) என்பது ரெட்டினால் போன்றே வேலைசெய்யக்கூடியது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் இது பக்கவிளைவுகள் அற்றது. முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போட முறையாக சன் ஸ்கிரீன் உபயோகிப்பதும் சரியான உணவுப்பழக்கமும் ஸ்ட்ரெஸ் இல்லாத லைஃப்ஸ்டைலும் மிக முக்கியம்.
from Latest News https://ift.tt/28pET53
0 Comments