மதரீதியாக மக்களின் மனதைப் புண்படுத்தியதாகக் கூறி Alt news என்னும் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜுபைர் ( Mohamed Zubair) டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜுபைரை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லி காவல்துறையினர் ஒரு நாள் ரிமண்டில் எடுத்துள்ளனர். ஸுபைர் சார்பாக பெயில் கோரிய மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
முகமது ஜுபைர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி இழிவாகப் பேசியதாக ட்விட்டர் பயனாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு 2018-ம் ஆண்டு ஜுபைரால் ட்விட்டரில் பதியப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர், "ஜுபைரால் பதியப்பட்ட அந்த குறிப்பிட்ட பதிவு ஒரு மதத்தினரை காயப்படுத்துவதாகவும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் உள்ளது. அந்த வெறுப்புணர்வு சமூக சீர்கேட்டை ஏற்படுத்தலாம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. விசாரணை சமயத்தில் போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் தற்போது ஜுபைரை கைது செய்துள்ளோம்" எனக் கூறினர்.
ஜுபைர் கைது பற்றி பேசிய Alt நியூஸின் மற்றொரு நிறுவனர், "டெல்லி காவல்துறையினர் 2020-ம் ஆண்டு பதியப்பட்ட மற்றொரு வழக்கை பற்றி விசாரிக்கவே ஜூபைரை அழைத்து சென்றனர். தற்போது எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வேறொரு புதிய வழக்கைப் பதிந்து கைது செய்துள்ளனர். பலமுறை நாங்கள் கேட்டும் இந்த புதிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை பிரதி எங்களுக்கு கொடுக்கப்படவில்லை." எனக் கூறினார்.
2020 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ட்விட்டரில் ஒரு பெண்ணை துன்புறுத்தியது தொடர்பானது ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் ஜுபைருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஏற்கனவே காவல்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, "பாஜக வின் வெறுப்பு மற்றும் பொய்கள் குறித்து வெளி உலகிற்கு கூறும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு எதிரிகள். உண்மையைக் கூறும் ஒரு குரலைத் தடுக்க நினைத்தால் அது போல ஆயிரம் குரல்கள் எழும்" எனக் கூறியுள்ளார்.
பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து பேசிய விவகாரத்தில் அவருக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி தன் கருத்துக்களை பதிவிட்டதில் முகமது ஜு பைரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/Jm5lhtY
0 Comments