தஞ்சாவூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ-வான, அமமுக மாநில துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநகர துணை செயலாளரான ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். வைத்திலிங்கம், ரெங்கசாமி இருவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து ஆரத்தழுவி கொண்டனர்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக டி.டி.வி தினகரன் செயல்படுவதாக பேசப்பட்டு வருகிறது. பொதுக்குழு பிரச்னைக்கு பிறகு தஞ்சாவூர் அமமுக-வினர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். வைத்திலிங்கம் தஞ்சாவூர் வந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் அமமுக-வினரும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் வைத்திலிங்கம், ரெங்கசாமி சந்தித்து கொண்டது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் சிரித்தபடி வணக்கம் வைத்து கொண்டே உற்சாகமாக காணப்பட்டார் வைத்திலிங்கம். திருமணத்தை நடத்தி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர், ``பொதுக்குழு கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வதற்கு முன்பே காலை 6 மணிக்கெல்லாம் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத சுமார் 600 பேர் மேடைக்கு முன்பாக அமர வைக்கப்பட்டனர். அவர்கள் தான் கூச்சல் போட்டனர்.
உறுப்பினர்கள் யாரும் எந்த வார்த்தையும் பேசவில்லை. அவர்கள் அழைத்து வந்திருந்தவர்களே அந்த நிகழ்வு நடப்பதற்கு காரணம். அவர்கள் ஒரு கட்சியின் ஜனநாயகத்திற்கு புறம்பாக கண்ணியம், கட்டுப்பாடு, கடமை எதுவும் இல்லாமல் பொதுக்குழுவை நடத்தினார்கள். நீதிமன்ற அறிவுரை எதுவும் கேட்காமல் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதை எதிர்ப்பதாக கூறி நாங்கள் வெளிநடப்பு செய்தோம். எடப்பாடி பக்கம் சென்ற பொதுக்குழு உறுப்பினர்கள், தற்போது எங்கள் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். வருகிற 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறாது. நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஓ.பி.எஸ்-ன் செல்வாக்கு தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல மடங்கு உயர்ந்துள்ளது” என்றார்.
from Latest News https://ift.tt/2W4TJwM
0 Comments