https://gumlet.vikatan.com/vikatan/2019-05/ffd7ffc5-c592-47bd-8ddf-5fc6a8223282/60099_thumb.jpgகடன் சுமை; வீட்டை விற்க முடிவு; லாட்டரி பரிசால் மீண்ட குடும்பம்; நடந்தது இதுதான்!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது என்ற பாவா. நில புரோக்கர் வேலை செய்துவந்தார். முஹம்மதுவுக்கு மனைவி மற்றும் நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். புரோக்கர் தொழிலில் சுமார் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கொரோனா காரணமாக வருவாயும் குறைந்துள்ளது. ஏற்கெனவே மூத்த மகளுக்கு திருமணத்துக்காக கடன் வாங்கிய நிலையில் வீடு கட்டுவதற்கு என வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன்பெற்றுள்ளார். லோன் தொகை வீடுவைக்க பற்றாமல் போனதால் உறவினர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். வீடு வேலை முடிந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இதனால் முஹம்மதுவுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.

லாட்டரி

வட்டியும், கடனும் கழுத்தை இறுக்கியது. புரோக்கர் தொழிலும் அடிவாங்கியதால் கடனை அடைக்க முடியாமல் திணறியுள்ளார். வேறு வழி இல்லாமல் ஆசையாய் கட்டிய தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் முஹம்மது. 2000 சதுர அடி உள்ள வீடும், நிலமும் 40 லட்சம் ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒருவர் முன்வந்துள்ளார். முஹம்மதுவும் வீட்டை விற்பனை செய்யத் தயாராகியுள்ளார். இதற்கிடையே கேரளா அரசின 50-50 (Fifty Fifty) லாட்டரியில் 50 ரூபாய் கொடுத்து கடந்த சனிக்கிழமை ஒரு லாட்டரி சீட்டு எடுத்துள்ளார்.

இதற்கிடையே வீட்டை விலை பேசிய நபர் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து, விலையை உறுதி செய்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு வருவதாகக் கூறியிருக்கிறார். அன்றைய தினம் 50-50 லாட்டரி குலுக்கல் நடைபெற்றுள்ளது. மாலை 3 மணியளவில் முஹம்மது எடுத்த எஃப்.எஃப் 537904 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் முஹம்மதுவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர். வீட்டை விலை பேசியவர்கள் அட்வான்ஸ் கொடுக்க முஹம்மதுவின் வீட்டுக்கு மாலை 5.30 மணியளவில் சென்றுள்ளனர். அவர்களிடம் லட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததைக் கூறியதுடன், வீட்டை விற்கவில்லை எனக்கூறி சந்தோஷமாக வழியனுப்பி வைத்துள்ளார் முஹம்மது.

லாட்டரியில் ஒரு கோடிரூபாய் பரிசு விழுந்த முஹம்மது

இதுபற்றி முஹம்மது கூறுகையில், "நான் தொடர்ந்து லாட்டரி எடுக்கும் பழக்கம் கொண்டவன் அல்ல. எப்போதாவது டிக்கெட் எடுப்பேன். எனக்கு சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் கடன் உள்ளது. கடனை அடைத்துபோக மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன்" என்றார். கடன் சுமையால் வீட்டை விற்பனை செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்துள்ள சம்பவம் கேரளாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.



from Latest News https://ift.tt/y9UKdzs

Post a Comment

0 Comments