நமது மாதாந்தர குடும்ப பட்ஜெட்டில், மருத்துவச் செலவுகளுக்கென்று ஒரு பெரிய தொகை செலவிட வேண்டியுள்ளது. மருத்துவப் பரிசோதனைகள் ஒருபுறம் இருந்தாலும், மருந்து மாத்திரைகளுக்கு மாதக்கணக்கில் அதிக அளவில் பணம் செலவாகிறது. 60%-க்கும் அதிகமான நோயாளிகள் இன்னும் மருந்துகளுக்கு தங்கள் கையிலுள்ள பணத்தைப் போட்டே சமாளிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 508 மருந்துகளின் விலை கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. எனினும், பல்வேறு அத்தியாவசியமான மருந்துகளின் விலை அதிகரிப்பு, நோயாளிகளுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது.
இந்நிலையில், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட சில முக்கிய நோய்களுக்கான மருந்துகளின் விலையை 70 சதவிகிதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு, வரும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது பரவலாகப் புழக்கத்தில் உள்ள இன்றியமையாத மருந்துகளைச் சேர்க்க ஏதுவாக, தேசிய அத்தியாவசிய மருத்துவப் பட்டியலில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஜூலை 26-ம் தேதி மருந்துத் துறையின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.
ஏற்கெனவே, 2019-ம் ஆண்டில், 41 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை வரம்பு, 30 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டது. இதன்மூலம், அந்த மருந்துகளின் விலை பெருமளவு குறைந்தது.
from Latest News https://ift.tt/8BJpN9n
0 Comments